ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு
திருப்பாடல் 138: 1 – 2, 2 – 3, 6, 8
இந்த திருப்பாடல் 2 சாமுவேல் ஏழாவது அதிகாரத்தை நிறைவு செய்யக்கூடிய திருப்பாடல் என்று சொல்லலாம். சாமுவேல் புத்தகத்தில் கடவுள், தாவீது அரசரிடம் ஆலயம் கட்டுவது தொடர்பான விளக்கம் அங்கே தரப்படுகிறது. ”ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு” என்கிற இறைவார்த்தை, தாவீது அரசரின் வலிமையான ஆன்மீகத்தையும், கடவுள் மீது அவர் வைத்திருக்கிற ஆழமான நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது. இதில் என்ன ஆன்மீகம்? இதில் என்ன ஆழமான நம்பிக்கை? என்று நாம் கேட்கலாம்.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தெய்வம் உண்டு என்கிற நம்பிக்கை கொண்டிருந்த காலச்சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த ஆசிரியர், கடவுளின் பேரன்பு மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறார். பல தெய்வங்கள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை நிறைந்த உலகத்தில், மற்ற தெய்வங்களைப் பற்றி பேசினால், அந்த தெய்வம் நம்மை தண்டித்து விடுமோ? என்று பயப்படுவது இயல்பு. அந்த பயம் இல்லாத நிலை வேண்டுமென்றால், நாம் வணங்கும் கடவுளின் வலிமையின் மீது நமக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ள ஒருவர் தான், இந்த நம்பிக்கையை அறிக்கையிட முடியும். அந்த நம்பிக்கையைத்தான் இங்கே நாம் பார்க்கிறோம்.
ஆண்டவரின் அன்பிற்கு தன்னையே முழுமையாக தருகிறார் ஆசிரியர். அது வலிமையான ஆன்மீகத்திலிருந்தும், உண்மையான நம்பிக்கையிலிருந்தும் வருவது. அதனை நாமும் நம்முடைய விசுவாச வாழ்க்கையில் வெளிப்படுத்துவோம். அதனை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்