ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக
திருப்பாடல் 104: 1, 24, 29 – 30, 31, 34
திருப்பாடல் ஆசிரியர் கடவுளின் மாட்சிமையைப் பற்றியும், அவரது வல்லமையான செயல்பாடுகளையும் பற்றி, அதிகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்படி எழுதியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒன்றை அனுபவித்தவர் தான், அதனை மற்றவர்களுக்கு எழுத்தால் சொல்ல முடியும். தன்னுடைய வாழ்க்கையில் கடவுளின் எல்லாவிதமான மாட்சிமையின் தன்மைகளைம் முழுமையாக அனுபவித்தவர் அவர். கடவுளின் கருவியாக இருந்திருக்கிறார். கடவுளின் மாட்சிமையை அரசாட்சி மூலமாக மக்களுக்கு நிரப்பியிருக்கிறார். இந்த திருப்பாடலிலும், கடவுளின் மாட்சிமையை முழுவதுமாகச் சொல்கிறார்.
கடவுள் இந்த உலகத்தை படைத்தது அவருடைய மாட்சிமைக்காக மட்டுமல்ல, மாறாக, மனிதர்கள் மீது தான் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாட்டால். மனிதர்களைப் படைத்ததும் சரி, அந்த படைப்பு முழுவதிற்கும் மனிதனைப் பொறுப்பாளராக மாற்றியதிலும் சரி, இந்த அன்பு வெளிப்படுவதை நாம் பார்க்க முடியும். மனிதர்களாகிய நாம், கடவுளின் திருநாமத்தை எப்போதும் போற்றி, புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான், திருப்பாடல் ஆசிரியரின் செய்தியாக இருக்கிறது. அவருடைய வாழ்க்கையில் அவர் அனுபவித்ததை நமக்கு உணர்த்தி, நம்மையும் போற்ற அழைக்கிறார். கடவுள் செய்த நன்மைகளையெல்லாம், நினைத்துப்பார்த்து, இஸ்ரயேல் மக்களை, கடவுளைப் போற்ற அழைக்கிறார்.
நம்முடைய வாழ்வில், நாமும் நமக்கு கிடைத்திருக்கிற இந்த வாழ்க்கைக்காக நன்றி சொல்வோம். நாம் பெற்றிருக்கிற அனைத்து நன்மைகளுக்காகவும், இரக்கப்பெருக்கத்திற்காகவும் எந்நாளும் கடவுளுக்கு நன்றிக்குரியவர்களாக வாழ, நல்ல மனம் வேண்டி ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்