ஆண்டவரின்மேல் உன் கவலையை போட்டுவிடு.தி.பாடல்கள்.55:22
கடவுள் நம்முடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்து,நாம் முறையிடும் வேளையில் நம்மை மறைத்துக்கொள்கிறார். நம் விண்ணப்பத்தைக்கேட்டு நம்முடைய கவலைகளை, பாரங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். கடுந்துயரம் நம் உள்ளத்தை பிளந்தாலும் சாவின் திகில் நம்மை கவ்விக்
கொண்டாலும், அச்சமும், நடுக்கமும் நம்மை பற்றிக்கொண்டாலும் நாம் மனம் கலங்க தேவையில்லை. பிசாசு நம் உள்ளத்தை வஞ்சித்து நம்மை ஏமாற்றி நாம் சோர்ந்து போகும் வண்ணமாக சில முயற்சிகளை கையாளப்பார்ப்பான். நாம் அவனுக்கு எதிர்த்து நின்றால் அவன் நம்மைவிட்டு ஓடிடுவான். நாம் சோர்ந்து போனால் இதுதான் சமயம் என்று நம்மை ஒழிக்கப்பார்ப்பான். ஆகையால் நம் கவலைகளை ஆண்டவரின்மேல் போட்டுவிட்டால் அவர் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக்கொள்வார்.
அதற்காகத்தான் நாம் தினந்தோறும் ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்து தியானிக்கும்பொழுது அவ்வார்த்தை நம்மை ஒவ்வொருநாளும் மெருகேற்றி நாம் வழிதப்பி போகாதபடிக்கு நமக்கு போதித்து அறிவுரை வழங்கும். யாரையும் தெடிசெல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆண்டவரின் வார்த்தை நமக்கு நல்ல வழிக்காட்டியாய் இருக்கும்.அதனால் தான் இயேசுவும் வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்று யோவான் 14 : 6 ல் சொல்லியிருக்கிறார்.
ஆண்டவரின் வார்த்தை ஒருபோதும் பொய் சொல்லாது. அவர் சொன்னால் சொன்னதுதான். மனம் மாற அவர் மனுஷன் கிடையாது. மனிதர்கள் வேண்டுமானால் சொல்லிவிட்டு நம்மை ஏமாற்றலாம். ஆனால் ஆண்டவர் சொன்னால் அதை நிச்சயம் செய்வார். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்.
தாவீது ராஜா திருப்பாடல்களில் சொன்னதுபோலவும், வேண்டியது போலவும் நாமும் ஆண்டவரின் பாதத்தை பற்றிக்கொண்டு அவரின் வார்த்தைகளை இரவும், பகலும், சிந்தித்தால் பருவகாலத்தில் கனி தரும் மரத்தைப்போல் நம்முடைய வாழ்வும் செழித்தோங்கும். நாம் அவரின் வார்த்தையை வாசிக்காமால் இருந்தால் எப்படி கிடைக்கும்? ஆகையால் அன்பானவர்களே! ஆண்டவரின் வார்த்தையை தினமும் வாசித்து அவர்மேல் நம்பிக்கை வைத்து உங்கள் கவலைகள், துயரங்கள், நோய்கள், கடன்பிரச்சனைகள், வாழ்க்கையில் உள்ள குறைகள் யாவையும் அவர்மேல் வைத்துவிடுங்கள். அவரே உங்களை ஆதரித்து,ஆசீர்வதித்து வழிநடத்தி காத்துக்கொள்வார்.
ஜெபம்
கருணையே உருவான தேவனே! பேரன்பை எங்களுக்கு கொடுப்பவரே! நீர் எங்களுக்காக முள்முடி சூட்டப்பட்டு சிலுவை சுமந்து, சிலுவையில் எங்களுக்காக ஆணிகளால் அடிக்கப்பட்டு உமது இரத்தத்தை சிந்தினீர். உம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த தெய்வம் நீர். நாங்கள் விருப்புவதை தருகிற ஆண்டவரும் நீரே. எங்கள் கவலைகள், துன்பங்கள், துயரங்கள் யாவையும் நீர் சிலுவையில் சுமந்தீர். ஆகையால் அவை எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்புக்கொடுத்து நாங்கள் நீர் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து உமது சித்தம் செய்து உமக்கே மகிமை செலுத்த உதவி செய்யும்.இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மன்றாடுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே! ஆமென்!அல்லேலூயா!!!