அல்லேலூயா
திருப்பாடல் 114: 1 – 2, 3 – 4, 5 – 6
“அல்லேலூயா“ என்கிற வார்த்தையின் பொருளான, ஆண்டவர் போற்றப்படுவாராக என்பதை, இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். கடவுள் எதற்கு போற்றப்பட வேண்டும்? எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்கள் வெளியேறியது, அதுவும் பாதுகாப்பாக வெளியேறியது வரலாற்றில், மறக்க முடியாத நிகழ்வு. இப்படியும் நடக்க முடியுமா? என்று மற்ற நாட்டினரை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு. அப்படி உலகமே ஆச்சரியப்பட வைத்து, நிகழ்வுகளை, இந்த திருப்பாடல் திரும்பிப்பார்க்கிறது. திரும்பிப் பார்க்கிறபோது, அப்போது நடந்த ஒரு சில நிகழ்வுகளுக்கு காரணத்தையும் கண்டுபிடிக்க முனைகிறது.
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து திரும்ப வந்தபோது, செங்கடல் ஓட்டம் பிடித்தது. யோர்தான நதி பின்னோக்கிச் சென்றது. இவை கடவுளின் வல்லமையைக் கண்டு, கடவுளின் வல்லமைக்கு முன்னால், தாங்கள் ஒன்றுமே கிடையாது என்பதை வலிறுத்தக்கூடிய வார்த்தைகள். மலைகள் செம்மறிக்கிடாய்கள் போல துள்ளிக்குதித்தன என்ற வார்த்தைகள், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு உடன் செல்வதைக்கண்டு, தங்களைப் படைத்தவரைக் கண்டுவிட்டோம் என்று மகிழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். இந்த திருப்பாடலில் கடவுளின் வல்லமையின் தாக்கம் ஓங்கி ஒலிக்கிறது. கடவுள் பேராற்றலும், வல்லமையும் மிகுந்தவர் என்பது இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.
இறைவனின் வல்லமையில் நாம் நம்பிக்கை வைக்கிறோமா? என்பது தான் இங்கு கேள்வியாக வைக்கப்படுகிறது. படைப்புக்கள் எல்லாம் இறைவனின் வல்லமையை நினைத்து கலங்குகின்றன, மகிழ்ச்சி கொள்கின்றன. படைப்பில் உயர்ந்த சிகரமாக இருக்கக்கூடிய நாம், இறைவனின் வல்லமையை எப்படி பார்க்கிறோம் என்று சிந்திப்போம். இறைவல்லமையில் நம் நம்பிக்கையை வைப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்