அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும்
எசேக்கியேல் 28: 1 – 10
அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும்
ஏத்பால் தீர் நாட்டின் அரசன். தற்பெருமையினால் தன்னை கடவுளுக்கு இணையானவனாகக் காட்டிக்கொண்டு, கடவுளுக்குரிய ஆராதனையை மக்களிடத்தில் கேட்கிறான், ”நானே கடவுள், நான் கடல் நடுவே, கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்” (28: 2). தன்னை இறைவாக்கினர் தானியேலை விட, அறிவாளியாகக் காட்டிக் கொள்கிறான், (28: 3). ஞானத்தாலும், அறிவாலும் செல்வம் சேர்ந்தது, ஆனால், அதனோடு செருக்கும் சேர்ந்தது. அந்த செருக்கு, அவனுடைய அழிவுக்கு காரணமாக போகிறது. இங்கு, தீர் நாட்டின் அரசன் என்று சொல்லப்பட்டாலும், அது தனிப்பட்ட அரசரையோ, இளவரசரையோ குறிக்கிற வார்த்தையாக பார்க்கக்கூடாது. மாறாக, ஒட்டுமொத்த நகரத்தை, நாட்டைக் குறிப்பதாக நாம் பார்க்க வேண்டும். தீர் நாட்டு மக்கள், தங்கள் நாட்டில் செல்வம் சேர்ந்ததால், கடவுளை விட, தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொண்டு, கடவுளை மறந்து போயினர். கடவுள் இருக்கிற இடத்தில், அவர்களுக்குள் செருக்கு நுழைந்தது. அதனால் வரப்போகிற அழிவைப் பற்றி இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார்.
பணம் ஒரு மனிதனுக்கு அகந்தையைக் கொடுக்கிறது. தன்னுடை செல்வம் அனைத்துமே தன்னுடைய பலத்தாலும், அறிவாலும் பெற்றது என்கிற செருக்கை, அவனுக்குள்ளாக உருவாக்குகிறது. தான் நினைத்தால், இந்த உலகத்தில் எதையும் செய்ய முடியும் என்கிற தவறான எண்ணத்தை, மாயத்தோற்றத்தை அவனுக்குள்ளாக உருவாக்குகிறது. அதன் வெளிப்பாடு தான், கடவுளுக்கு தான் இணையானவன் என்கிற மமதையை அவனுக்குள்ளாக உண்டாக்குகிறது. அந்த செருக்கு தானே, அவனுடைய அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது. விவிலியத்திலும் சரி, வரலாற்றிலும் சரி, செருக்கினால் அழிந்தவர்கள் ஏராளனமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைச் சரித்திரம் எல்லாம், நமக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. செருக்கினால் யாரும் வாழ்ந்தவர்கள் கிடையாது. அந்த செருக்கை அகற்றி, அகந்தையை நீக்கி, இறைவனுடைய பிள்ளைகளாக, தாழ்ச்சியுயோடு வாழ வேண்டும் என்பதுதான், இந்த இறைவார்த்தை நமக்குத் தருகிற பாடமாக இருக்கிறது.
நம்முடைய வாழ்வில், நாம் பொருட்செல்வத்தால், திறமைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், இறைவனைப் போற்றுவோம். இறைவனுக்கு நன்றி கூறுவோம். இறைவனுடைய அன்பும், ஆசீரும் நம்மோடு இருக்கும்படியாக பார்த்துக் கொள்வோம். எந்நாளும் அவருடைய துணையோடு நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்