விடியற்காலை தனி செபம் !
இயேசு எண்ணிலடங்கா மக்களைக் குணமாக்கி நலமளித்த தரவுகளை இன்றைய வாசகத்தில் பதிவு செய்திருக்கிறார் புனித மாற்கு. இயேசுவின் குணமளிக்கும் பணி எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்ததென்றால், “நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது” என்று வாசிக்கிறோம். அந்த அளவுக்கு இயேசு நலமளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச்செய்தியைத் தொடர்ந்து மாற்கு பதிவு செய்திருக்கும் தகவல்தான் நம் கவனத்தை இன்று ஈர்க்க வேண்டும். “இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்” என்னும் செய்தியே அது. ஆம், இயேசுவின் அத்தனை அரும்பணிகளுக்கும் ஊற்றாக இருந்தது இறைவனோடு அவர் கொண்டிருந்த சிறப்பான தனி உறவுதான். அந்த உறவை வளர்த்துக்கொள்வதற்காக, வலிமைப்படுத்துவதற்காக நாள்தோறும் நேரம் ஒதுக்கினார் இயேசு. அந்த நல்ல பழக்கத்தை நாமும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டு நாள்தோறும் அதிகாலை நேரத்தில் இறைவனைப் புகழ்கின்ற, இறைவனோடு உறவாடுகின்ற பழக்கத்தில் வளர்வோம்.
மன்றாடுவோம்: செப வீரரான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் செபிக்க நீர் நேரம் ஒதுக்கினீர். செபிப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கினீர். உம்மைப் போல நாங்களும் செப வீரர்களாக வாழ்கிற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா

