அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தும் நம் ஆண்டவர் இயேசு.
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள்.
நம் ஆண்டவராகிய இயேசு நமக்கு ஆயிரக்கணக்கில் வேதத்தின் மகத்துவங்களை [திருச்சட்டங்களை ] எழுதி கொடுத்திருந்தாலும் நாம் அவைகளை பற்றிக்கொள்ளாமல், அவைகள் நமக்கில்லை யாருக்கோ என்று அலட்சியப்படுத்தி விட்டு பிறகு துன்பங்களும், துயரங்களும் வரும்பொழுது மனம் சோர்ந்து போய்விடுகிறோம். ஓசேயா 8:12. ஆண்டவராகிய இயேசு 40 நாள் இரவும், பகலும் நோன்பிருந்து பின் சாத்தானால் சோதிக்கப்படும்படி பாலை நிலத்திற்கு தூய ஆவியால் அழைத்துச்செல்லப்பட்டார் என்று மத்தேயு 4:1,2. ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். அவருக்கே அந்த நிலை என்றால் நமக்கு எப்படி என்று இந்த தவக்காலத்தில் யோசிப்போம்.
நமக்காக பிறந்து வளர்ந்து நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து பின்னர் அந்த சிலுவையிலே அடிக்கப்பட்டு, அந்த நேரத்திலும் நமக்காக பரிந்து பேசி, நமக்காக வேண்டுதல் செய்கிறார். இந்த மகத்துவமான ஆண்டவரின் சிந்தனைகளை, அவர் மனவிருப்பத்தை நாம் அறிந்து அவர் விரும்பும் வழியில் நடந்து அவருக்கு மகிமை சேர்ப்பதே இந்த தவக்காலத்தின் சிறப்பாகும். ஏதோ கடனே என்று வாழாமல் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து வாழ்ந்து பிறர்க்கு எல்லா வகையிலும் நம்மால் முடிந்த உதவிகளை செய்து, அதில் எந்தவொரு எதிர்பார்ப்பும் எதிர்பார்க்காமல் வாழவே நம் ஆண்டவர் அவரின் வேதத்தின் மூலம் கற்றுத் தந்திருக்கிறார்.
பிரியமானவர்களே! நாமும் அவரின் அன்பை உணர்ந்து, அதை ருசித்து வாழ கற்றுக்கொள்வோம். எல்லா சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக இருக்கும்பொழுது மாத்திரம் அல்ல, கஷ்டமான, இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவரைப்போல் நாமும் நமது அன்பை வெளிப்படுத்தி அவரின் பிள்ளைகள் என்ற அடிச்சுவட்டை பின்பற்றி அவர் சாயலாக மாறுவோம். இதைத்தான் நம் ஆண்டவர் இந்த தவக்காலத்தில் மாத்திரம் அல்ல எல்லா காலத்திலும் விரும்புகிறார். ஆகையால் நீங்கள் யாராயிருந்தாலும் ஒவ்வொரு நாளும் அவர் வேதத்தை ஆய்ந்து படித்து தியானித்து வாழ முடிவு செய்யுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை நீர் அருகே வளரும் செடிப்போல மிகவும் அழகாக பசுமையாக இருக்கும். அவர் வாயில் இருந்து புறப்பட்டு வரும் ஒவ்வொரு வார்த்தையாகிய வாக்குகளினாலும் நாம் பிழைத்துக் கொள்ளலாம். இந்தநாளில் ஒரு முடிவு எடுத்து நம்மையே அவருக்கு படையலாய் படைக்க முன் வரலாமே!!!!!
ஜெபம்
அன்பே உருவான இறைவா! நீர் எங்களை உமது அன்பின் கயிறுகளால் கட்டி அனைத்துக் கொண்டதற்காய் உமக்கு கோடி நன்றி பலிகளை செலுத்துகிறோம். இந்த தவக்காலத்தின் திட்டங்களையும், உமது எண்ணங்களையும் அறிந்து செயல்பட எங்களுக்கு கற்றுத் தாரும். எல்லா சூழ்நிலைகளிலும், நீர் விரும்பும் பிள்ளைகளாக வாழ எங்களுக்கு போதித்து, நல்வழிப்படுத்தி காத்துக்கொள்ளும். நீர் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறீர் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள உதவிச் செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் அருமை பிதாவே, ஆமென்!! அல்லேலூயா!!!