ஒழுங்குகள் காட்டும் ஒழுக்கம்
திருச்சட்ட அறிஞர் ஒருவர், தங்களை இயேசு இழிவுபடுத்துவதாகக் கூறுகிறார். ஆனால், இயேசு இன்னும் அதிக வேகத்தோடு அவர்கள் செய்யக்கூடிய தவறான செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். தங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் சட்டங்களை, விளக்கினார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில், யாரும் 1000 அடிக்கு மேல் நடக்கக்கூடாது. நடந்தால் அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். அதே வேளையில், தாங்கள் வசிக்கும் பகுதியில், ஊருக்கு தொடக்கத்தில் ஒரு கயிறு குறுக்கே கட்டியிருந்தால், அந்த கயிறு வரை, ஒருவரின் வீடாக மாறிவிடும். எனவே, அந்த கயிற்றிலிருந்து, அவர் இன்னும் 1000 அடிகள் நடக்கலாம். அதே போல, ஏதாவது ஒரு இடத்தில், இரண்டு வேளைக்கான உணவை வைத்தால், அதுவரை அந்த மனிதரின் வீடாக மாறிவிடும். அதிலிருந்து இன்னும் 1000 அடிகள் அவர் நடந்து செல்லலாம். இந்த ஒழுங்குகளையெல்லாம் கடவுள் நிச்சயம் கொடுக்கவில்லை. தாங்கள் நினைத்ததை எல்லாம், இந்த திருச்சட்ட அறிஞர்கள் ஒழுங்குகள் என்ற பெயரில் மக்களைப் பின்பற்ற வற்புறுத்தினர். ஆனால், அவர்களுக்கு ஏதாவது...