ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளே செபமாலை வடிவமாகி உள்ளன
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம் தான் டைட்டானிக் கப்பல் பற்றிய திரைப்படமாகும். அதில் வரும் ஒரு காட்சிக்குப் பலரும் சிறப்பிடம் கொடுத்திருக்கமாட்டோம் என்பது வெளிப்படையான உண்மைதான். டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொணடிருந்த வேளையில் அதில் இருந்த இயேசு சபைக் குருவும் அவரருகில் இருந்த சிறார்களும் ஒன்றாகக் கூடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வியப்பான உண்மையே. கடந்த 6 நூற்றாண்டுகளாக மேற்கத்திய திருச்சபையில் மரியன்னைப் பக்தி முயற்சிகளில் செபமாலை சொல்வது முதன்மையிடம் பெறுகிறது. செபமாலை பக்தியின் மூலம் அக்டோபர் 7 ஆம் நாள் லெபான்றோவுக்கு அருகில் கிறிஸ்தவர்கள் துருக்கியரை தோற்கடித்து மாபெரும் வெற்றிபெற்றனர். அதன் நினைவாக அக்டோபர் 7 ஆம் திகதி செபமாலை அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தை கிறிஸ்தவர்கள் செபமாலையின் மாதமாக அனுசரிக்கின்றனர். ஓயாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக அருள்நிறை மந்திரத்தைச் சொல்வது சிறுவர், சிறுமியர் அல்லது வேலை இல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும்...