உண்மைக்கு சான்று பகர…
மக்கள் இயேசுவிடம் திரளாக வந்தபோது, அவர்களுக்கு புதிதாகக் கற்றுக்கொடுக்க வேண்டும், புதிய சிந்தனைகளைக் கொடுக்க வேண்டும், தனது கருத்துக்கள் மட்டும் தான் மக்களின் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டும் என்று, இயேசு ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்த, திருச்சட்டத்தைப் பற்றிய விளக்கங்களை முற்றிலுமாக மாற்றி, புதிய நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதில்லை. மக்களுக்கு எது நன்மையோ, அது ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால், அதனையும் சேர்த்தே அவர்களுக்குப் போதிக்கிறார். இதிலிருந்து இயேசுவின் சிந்தனை, மக்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதுதான். இன்றைய உலகின் அறிவு வளர்ச்சி நாம் நினைக்காத வண்ணம் வளர்ந்திருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதற்கு பல வாய்ப்புகள் நமக்கு தரப்படுகிறது. எது உண்மை? என்பதை அறிவது மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோமா? என்றால், அது கேள்விக்குறிதான். உண்மை என்ன? என்பது தெரிந்திருந்தாலும், அதனை நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை....