புகழ்ச்சியும் தற்பெருமையும்
நம்மைப்பற்றி நாமே புகழ்வது தற்பெருமை. அடுத்தவர் நம்மைப்பார்த்து வியந்து பேசுவதுதான் புகழ்ச்சி. இந்த தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் வேறுபாடு தெரியாமல், வாழ்வையே இழந்தவர்கள் தான் பரிசேயர்கள். பரிசேயர்கள் தாங்கள் செய்வது சரி என்று நினைத்தார்கள். அது தவறு இல்லை. ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், தாங்கள் செய்வது மட்டும் தான் சரியென்று நினைத்தார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு. இதனைத்தான் இயேசு நேரடியாகக் கண்டிக்கிறார். இயேசு எப்போதுமே தன்னைப்பற்றி உயர்வாகப் பேசியதில்லை. ஆனால், மக்கள் அவரை உயர்வாகப் பேசினார்கள். பரிசேயர்கள் எப்போதுமே தங்களை உயர்வாகவே எண்ணினார்கள். ஆனால், மக்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இது அவர்களுக்கு தெரியாமலும் இல்லை. ஆனாலும், தங்களது அதிகாரத்தினால், மக்களை அடிபணிய வைத்தனர். தாங்கள் நினைத்ததைச் சாதித்தனர். இப்படிப்பட்ட தற்புகழ்ச்சியை இயேசு கடுமையாக எதிர்க்கிறார். இன்றைக்கு புகழ்ச்சி என்பது நமது வாழ்வைப்பார்த்து, மக்கள் நமக்குக் கொடுக்கக்கூடிய அடையாளம். அதனை நாமே கேட்டுப்பெற முடியாது. நாம் வாழக்கூடிய வாழ்வைப்பார்த்து, அது நமக்குக் கொடுக்கப்பட வேண்டும்....