கோதுமை மணியின் மாட்சி
தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின் போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக் காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு அவர்களிடம் உரையாடுகிறார். கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை. துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள். எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய் இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து “கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1: 22-24). அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும், அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுக்க முன்வந்தார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம்...