இறைவன் வழங்கும் அன்பு
எசேக்கியேல் 17: 22 – 24 உரிமை இழந்துபோயிருக்கிற மக்களுக்கு, அடிமைத்தனத்தின் ஆக்ரோஷத்தை அனுபவித்திருக்கிற மக்களுக்கு, வாழ்வே இவ்வளவு தானா? என்று வேதனைப்பட்டிருக்கிற மக்களுக்கு ஆறுதல் செய்தியாக வருவதுதான் இன்றைய வாசகம். தளர்ந்து போயிருக்கிற மக்களை நம்பிக்கை நிறைந்த சொற்களால், இறைவாக்கினர் வழியாக உறுதிப்படுத்துகிறார் இறைவாக்கினர். நடப்பது ஒவ்வொன்றும் இறைவனின் திட்டத்தின்படியே நடக்கிறது என்பது இங்கு நமக்குத் தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் இறைவனின் அன்பை உணராதவர்களாக வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதற்கு, இறைவன் அவர்களை எதிரிகளிடம் கையளிக்கிறார். எதிரிகளிடம் கையளிப்பது, அவர்களைத் துன்பப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, தங்கள் தவறை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக. மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதற்காக. மக்கள் எந்நாளும் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக. ஒருவருக்கொருவர் சகோதர மனப்பான்மையோடு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக. எனவே தான், மக்கள் திருந்திய உடனே, இறைவன் அவர்களுக்குத் தேவையான காரியங்கள் அனைத்தையும் உடனிருந்து செய்கிறார். ஏற்கெனவே ஆசீர்வதித்ததை விட,...