அருள் நிறைந்த மரியே, வாழ்க!
பங்குமக்கள் அடிக்கடி இந்தப்பகுதியைப் படிக்கின்றபோதெல்லாம், ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. கன்னிமரியாளுக்கு வானதூதர் மங்களவார்த்தை சொல்கிறபோது கேட்கும் அதே கேள்வியைத்தான், செக்கரியாவும் கேட்கிறார். கன்னிமரியாளுக்குப்பதில் சொல்லப்படுகிறது. செக்கரியாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே? இருவரும் ஒரே கேள்வியைத்தானே கேட்கிறார்கள்? என்று. ஏனெனில் கன்னிமரியாள், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’ என்று கேட்கிறாள். செக்கரியாவும் வானதூதரிடம், ‘இது நடைபெறும் என எனக்கு எப்படித்தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே?’ என்றார். இதற்கு பல பதில்களை நாம் சொன்னாலும், ஒரே ஒரு பதில் நம் கேள்விக்கு நிறைவானப்பதிலைத்தரும். கணவனை அறியாத கன்னி கருவுறுதல் என்பது நடைபெறவே முடியாத ஒன்று. ஆனால், வயதானவர்கள் பிள்ளை பெறுவது மீட்பின் வரலாற்றில் நடந்திருக்கிறது. ஆபிரகாம் வயதுமுதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றார். குருத்துவப்பணி ஆற்றக்கூடிய செக்கரியாவுக்கு இது நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தெரிந்திருந்தும் கேட்பதால்தான், வானதூதரால் அவருக்கு ஓர் அடையாளம் தரப்படுகிறது. அது தண்டனை அல்ல. அடையாளம்....