மனமாற்றம்
உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான். தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்....