இடையூறாக இருக்க வேண்டாம்
இடையூறாக இருக்கும் எதுவும் களையப்பட வேண்டும். ஏனென்றால், அதுதான் நமது அழிவிற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. நாம் அனைவருமே இப்படித்தான் நடக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதன்படியே பெரும்பாலானோர் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், ஒருவர் அதற்கு மாறாக நடக்க ஆரம்பிக்கிறார். ஒட்டுமொத்த ஒழுங்குமுறையும் அங்கே அடிபட்டுக்கிடக்கிறது. இரயில் பயணச்சீட்டு எடுப்பதற்காக அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். வரிசை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென ஒருவர் வந்து இடையில் புகுந்து குழப்பம் ஏற்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாக அந்த வரிசை ஒழுங்கற்றுப்போய்விடுகிறது. ஆக, இந்த ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் ஒரு மனிதர்தான் காரணமாக இருக்கிறார். அவர் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அப்போது, ஒழுங்குகள் ஒழுங்குகளாக மதிக்கப்படும். இப்படிப்பட்ட இடையூறு செய்கிறவர்களைத்தான் நற்செய்தி பேசுகிறது. அவர்கள் திருத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவரும் அதனால் சீரழிந்துபோவதைவிட, இடையூறு செய்கிறவர் தண்டிக்கப்படுவது அனைவருக்கும் நலமாக இருக்கும். நமது வாழ்வில் நாம் இடையூறு செய்கிறவர்களாக இருக்கிறோமா? மற்றவர்கள்...