எதிர்பார்ப்பு இல்லாத உதவி
இயேசு கைம்மாறு, வெகுமதி பற்றி பேசும்போது, இந்த உலகம் சார்ந்த பொருட்செல்வத்தைப்பற்றிப் பேசவில்லை. பழைய ஏற்பாட்டில், செல்வமும், வெகுமதியும் பெற்றவர்கள், நல்லவர்களாகக் கருதப்பட்டனர். அதிகமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றவர்கள், அறுவடை நிறைவாகப் பெற்றவர்கள் அனைவருமே, கடவுளின் ஆசீரைப் பெற்றவர்களாக மக்கள் நினைத்தனர். யோபு புத்தகத்திலும், இந்த கருத்துதான் மீண்டும், மீண்டும் வலிறுத்தப்படுகிறது. யோபு தான் தவறு செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும், அவருடைய நண்பர்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நல்லவர்கள் என்றுமே கடவுளின் அருளைப்பெற்று வாழ்வர் என்பது அவருடைய நண்பர்களின் வாதம். இயேசு அப்படிப்பட்ட கருத்தை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், ஏழைகளோடு, ஒடுக்கப்பட்டவர்களோடு, அடிமைப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப்பழகியவர் இயேசு கிறிஸ்து. அப்படியானால், இயேசு சொன்ன செய்தியின் பொருள் என்ன? இயேசு கைம்மாறு என்று எதனைக் குறிப்பிடுகிறார்? மக்கள் எதையும், நாம் இப்போது கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தால், அவர்களுக்குரிய கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது...