ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்
திருப்பாடல் 103 ஒரு புகழ்ச்சிப்பாடல். ஆண்டவருடைய இரக்கத்தைப் புகழ்ந்து பாடக்கூடிய ஒரு பாடல். ஆண்டவர் அருளும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறார் என்பதைத் தெளிவாக விளக்கிக்கூறும் பாடல். உடல், உள்ளம், ஆன்மாவோடு இணைந்து கடவுளைப் போற்றுவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கும் பாடல். கடவுள் நம்மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தால், நமது குற்றங்களை ஒரு பொருட்டாக எண்ணாமல், நம்மை தேடி வருவார் என்று, கடவுளின் இரக்கத்தை மையப்படுத்திச் சொல்லும் பாடல். இங்கே இரக்கம் என்பது நாம் செய்யக்கூடிய இரக்கச்செயல்களை மையப்படுத்தியது அல்ல, மாறாக, மன்னிப்பு என்கிற பரிமாணத்தை வலியுறுத்திச் சொல்வது. கடவுளின் மன்னிப்பிற்கு ஒரு அருமையான உதாரணம் ஒன்று தரப்படுகிறது. மேற்கும், கிழக்கும் என்றைக்குமே ஒன்று சேராது. இரண்டு திசைகளும் வெவ்வேறு துருவங்கள். இரண்டும் ஒருபோதும் நெருங்கி வர முடியாது. அத்தனை தொலைவிற்கு, கடவுள் நம் பாவங்களை அகற்றுகிறார் என்றால், அவர் நம்முடைய பாவங்களை நினைவுகூர்வதே கிடையாது என்று சொல்கிறார். நாம் செய்த பாவங்களுக்கு...