துன்பத்தில் தாழ்ச்சி
வரலாற்றிலே, எத்தனையோ மனிதர்களுக்கு, சிலுவைச்சாவை பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். இயேசுவைவிட கொடுமையான தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள்பட்ட பாடுகளைவிட இயேசுவின் பாடுகள் எவ்வாறு உயர்ந்தது என்கிற கேள்வி நம்முள் எழலாம். ஒருவேளை, இயேசு எந்தவித பாவமும் செய்யாதவர், இருந்தாலும் தண்டிக்கப்பட்டார், எனவே அவருடைய பாடுகளை நாம் நினைவுகூர்வது சாலச்சிறந்தது என்று நாம் பார்த்தோமென்றாலும்கூட, இயேசுவைப்போல் எத்தனையோ மனிதர்கள், தாங்கள் செய்யாத பாவங்களுக்காக, பொதுவாழ்விலே ஈடுபட்டதற்காக, அநியாயமாக தீர்ப்பிடப்பட்டு, தங்களுடைய உயிரை ஈகம் செய்திருக்கிறார்கள். இயேசுவினுடைய பாடுகள் ஒரே ஒருநாள். முந்தைய இரவு கைது செய்யப்படுகிறார். அடுத்தநாள் சிலுவையிலே அறையப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால், தொழுநோயினால், புற்றுநோயினால், காசநோயினால் வாழ்வு முழுவதும், உடல்வலியிலும், மனஉளைச்சலிலும், வாழ்ந்தும் இறந்துகொண்டிருக்கின்ற மனிதர்கள் மத்தியில், இயேசுவின் பாடுகள் எப்படி தனித்துவம் மிக்கதாக இருக்க முடியும் என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்போம். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலே 2: 7 ல் பார்க்கிறோம்: ‘கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்....