சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் !
இறையாட்சியை இயேசு கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகிறார். கடுகு விதை மிகவும் சிறியது. ஆனால், வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கும் தங்குமிடமாகிறது. அதுபோல, புளிப்பு மாவும் சிறிய அளவானது பெரிய அளவு மாவையும் புளிப்பேற்றுகிறது. இறையாட்சியின் செயல்கள் மாபெரும் செயல்களில் அல்ல, சின்னஞ்சிறு செயல்கள் வழியாகப் பரவுகிறது என்கிறார் ஆண்டவர் இயேசு. இயேசுவின் குழந்தை தெரசாள் சிறிய வழி என்னும் சிறு செயல்கள் வழியாகவே பெரிய ஆற்றல்மிகு சாதனைகளைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டினார். எனவே, சிறிய செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவனமாக இருப்போம். திருப்பாடல் 131 இந்த சிந்தனையை நன்கு வெளிப்படுத்துகிறது. ”ஆண்டவரே, என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. என் பார்வையில் செருக்கு இல்லை. எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” என்று அருமையாகப் பாடுகிறார்...