விண்ணகத்தில் செல்வம் சேர்ப்போம்
”விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” என்ற இந்த இறைவார்த்தை யூதர்களுக்கு நன்றாக புரியக்கூடிய வார்த்தைகளாக இருந்தன. ஏனென்றால், யூதமக்கள் மத்தியில் யூத சமயத்தைத் தழுவிய ஓர் அரசரைப்பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதியாபெனேவைச்சார்ந்த மோனோபாஸ் என்கிற அரசர் தான் அவர். யூத சமயத்தைத் தழுவியவுடன் அவர் செய்த முதல் காரியம், தனது செல்வத்தையெல்லாம், பஞ்சகாலத்தில் ஏழைகளுக்குப்பகிர்ந்து கொடுத்தார். அதைப்பார்த்த அவருடைய சகோதரர்கள், ”நமது மூதாதையர்கள் அனைவரும் செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்த்து வைத்திருந்தார்கள். நீயோ, அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாயா?” என்று கடிந்துகொண்டார்கள். அதற்கு அரசர், நமது மூதாதையர் மண்ணகத்தில் செல்வத்தைச் சேர்த்து வைத்தனர். நானோ விண்ணகத்தில் சேர்த்து வைத்திருக்கிறேன். மண்ணகத்தில் சேர்த்து வைத்த செல்வத்தினால் நமக்கு பயன் ஒன்றும் இல்லை. விண்ணகச்செல்வம் நமக்கு நிலையான வாழ்வு தரும்” என்று பதிலளித்தாராம். இயேசு இந்த உவமையைச் சொன்னவுடன், நிச்சயம் அங்கிருந்தவர்களுக்கு, தங்கள் நடுவில் பிரபலமாயிருந்த இந்த கதை நினைவுக்கு வந்திருக்கும். இயேசுவும்...