”இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” (லூக்கா 9:9)
இயேசு கலிலேயாவில் ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்தபோது புதுமைகள் பல நிகழ்த்தினார். அவரைப் பற்றி எல்லாரும் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பலரும் பல பதில்களைத் தந்தனர். ஏரோதுவின் ஆணைப்படி கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவான் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றுகூட மக்கள் இயேவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததுண்டு. ஆனால் ஏரோது அப்படி நினைக்கவில்லை. அவன்தான் யோவானின் தலையைக் கொய்துவர ஆணையிட்டவனாயிற்றே. யோவான் இறந்தொழிந்தார் என்பது ஏரோதுவுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பேசிக்கொண்டது வேறு ஒருவரைப் பற்றித்தான் என்பது ஏரோதுவுக்குப் புரிந்தது. என்றாலும் அந்த மர்ம மனிதர் யார் என்பதை ஏரோது தெரிந்திருக்கவில்லை. இயேசு யார் என நமக்குத் தெரியுமா? பலரும் இயேசு யார் என்பதைத் தெரிந்ததுபோல நினைத்துக்கொள்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் எத்தனையோ மக்கள் இயேசுவை யார் என அடையாளம் தெரியாமலே வாழ்கின்றார்கள். இவர்களுள் கிறிஸ்தவரும் உண்டு, பிறரும் உண்டு. ”புதியது என்று...