பெறுவதைவிட தருவதே மேலானது !
சில உண்மைகளை அனுபவத்தின் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அவற்றுள் ஒன்றுதான் கொடுப்பதன் மேன்மை. கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற ஆண்டவரின் அருள்வாக்கின் அருமையை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் கொடுத்தலின் மேன்மை போற்றப்படுகிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் கொடுத்துப் பசி நீக்கிய கைம்பெண்ணுக்கு ஆண்டவர் அற்புதமான முறையில் தொடர்ந்து உணவு கிடைக்கச் செய்த நிகழ்வை வாசிக்கிறோம். நற்செய்தி வாசகத்திலோ ஆண்டவர் இயேசு மறைநுhல் அறிஞர்களைச் சாடும்போது அவர்கள் பிறருக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்வதைக் கண்டனம் செய்கிறார். அத்துடன், ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறார். இரு வாசகங்களிலும் வருகின்ற கைம்பெண்கள் தாங்கள் பெறுகின்ற நிலையில் இருந்தபொழுதும்கூட கொடுக்கின்ற மனம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, பாராட்டையும், இறை ஆசியையும் பெற்றுக்கொண்டனர். பொதுவாகவே, குறைவாக உள்ளவர்களுக்குத்தான் நிறைவான மனம் இருக்கிறது என்று நாம் சொல்கிறோம். இந்தக் கைம்பெண்கள் அதை எண்பித்துக்காட்டுகின்றனர்....