புதிய பார்வை
இன்றைய சமுதாயத்தில் முன்சார்பு எண்ணங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஒருவரை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து, அவர் இப்படித்தான் என்று முடிவுகட்டி விடுகிறோம். அவரைப்பற்றி நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது அடிப்படை உறவுச்சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், இன்றைய நற்செய்தி நாம் திறந்த உள்ளத்தோடு மற்றவர்களுக்கு செவிமடுக்க அழைப்புவிடுக்கிறது. தொடக்கத்தில் இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தபோது, மக்களில் ஒருசிலர் தான் அவருடைய போதனையைக் கேட்டிருப்பார்கள். கேட்டதில் ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கேற்ப, இயேசுவைப்புரிந்திருப்பார்கள். சிலர் சரியாகப் புரிந்திருக்கலாம். சிலர் தவறாகப் புரிந்திருக்கலாம். அந்த கருத்து தான், மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கும். அவரைச் சந்தித்தவர்கள் அனைவருமே இந்த ஒரு கண்ணோட்டத்தோடு தான் அணுகியிருப்பார்கள். இந்த பார்வை நிச்சயம் சரியான பார்வையாக இருக்க முடியாது. நாம் ஒருவரை அணுகுகிறபோது, திறந்த உள்ளத்தோடு அணுக வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் என்பது நமக்கு முக்கியமல்ல. நாம் எப்படி இருக்கிறோம்? நமது பார்வை, சிந்தனை...