இயேசுவின் சமுதாய சீர்திருத்தம்
ஒவ்வொரு யூதரும் ஆண்டிற்கு ஒருமுறை ஆலயவரி செலுத்த வேண்டும். அதற்கு செக்கேல் எனப்படும் நாணயத்தின் பாதி மதிப்பில், இந்த வரியைச் செலுத்த வேண்டும். இது ஒரு தொழிலாளியின் இரண்டு நாள் கூலிக்கு இணையானது. பாஸ்கா திருவிழா கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, இந்த காணிக்கையைப் பிரிப்பதற்காக, ஆங்காங்கே எல்லா நகர வீதிகளிலும், கிராமங்களிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வரிவசூலிக்கப்படும். பெரும்பாலும், யெருசலேமில் பாஸ்கா விழா கொண்டாட வரும் பயணிகள் தான், இதில் அதிக எண்ணிக்கையில் கொடுப்பார்கள். பாலஸ்தீனத்தில் அனைத்து வகையான நாணங்களும் புழக்கத்தில் இருந்தன. கிரேக்க நாணயம், உரோமை நாணயம், சிரிய நாணயம், தீர் நாணயம், எகிப்து நாணயம் என்று, பல நாணயங்கள் இருந்தன. அவைகளுக்கான சரியான மதிப்புகளும் சரியான விகிதத்தில் பாலஸ்தீனத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால், நாணயம் மாற்றுவோருக்கு ஆலயத்தில் என்ன வேலை என்று கேட்கத்தோன்றும்? யெருசலேம் ஆலயத்தில் செலுத்தப்படும், இந்த ஆலய வரி எல்லா நாட்டு நாணயத்திலும் கொடுக்க முடியாது. யெருசலேமில்...