இயேசுவின் வல்லமை
“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்: ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்வதன் பொருள் என்ன? இயேசுவை விட வல்ல செயல்களை ஒருவர் செய்து விட முடியுமா? இயேசுவை விட வல்ல செயல்கள் செய்தால், அவர் இயேசுவை விட மேலானவர் ஆகிவிடமாட்டாரா? உண்மையிலே இயேசு இங்கே என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த கேள்விகள் அனைத்துமே, இந்தப்பகுதியை வாசிக்கின்றபோது நமக்கு ஏற்படும் எண்ணங்கள். தொடக்க காலத்திருச்சபை உண்மையிலே குணப்படுத்துகின்ற வல்லமையைப்பெற்ற ஒன்றாகத்திகழ்ந்தது. 1 கொரிந்தியர் 12 வது அதிகாரத்தில் தூய ஆவியார் அருளும் கொடைகளைப்பற்றிப் பார்க்கிறோம். 9 வது இறைவார்த்தைச்சொல்கிறது: “அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையை அளிக்கிறார்”. அதேபோல் யாக்கோபு தனது திருமுகத்தில் 5: 14 ல் சொல்கிறார்: “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்”....