உறுதியான மனம்
திருத்தூதர்பணி 25: 13 – 21 வாழ்க்கையின் ”குறிப்பிட்ட தருணம்“ ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ, ஒரு சமூகத்தின் பார்வையையோ, ஒட்டுமொத்த நாட்டின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கும். அசோகருக்கு கலிங்கத்துபோர் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. தூய பவுலடியாருக்கு, உயிர்த்த இயேசுவின் காட்சி, அவருடைய வாழ்வையே மாற்றியது. இந்திய சுதந்திரப்போரில் சிப்பாய்க்கலகம் இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பின் வாழ்வில் அவர் கண்ட கனவு, மரியாளைப் பற்றிய பார்வையை மாற்றியது. இப்படி ஒரு குறிப்பிட்ட “தருணமானது“ ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்வையோ, ஒட்டுமொத்த சமூகத்தின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கிறது. உலக வரலாற்றின் குறிப்பிட்ட முக்கிய தருணமானது, இயேசுவின் உயிர்ப்பே என்பதை ஆணித்தரமாக பவுலடியார் சொன்னது, இன்றைய வாசகத்தில் விளக்கப்படுகிறது. பெஸ்தைச் சந்திக்க வந்த அகிரிப்பா, இரண்டாம் மார்க்கஸ் ஜீலியஸ் அகிரிப்பா ஆவார். இவர் அகிரிப்பாவின் மகனும் (12: 1 – 25), பெரிய ஏரோதுவின் கொள்ளுப்பேரனும் ஆவார்....