நாவின் அதிகாரம்

அன்பின் இறைவா! இந்நாளின் கிருபைக்காக உம்மிடம் வருகிறோம். நாவினால் நாங்கள் பாவம் செய்யாதபடிக்கு உமது பிள்ளைகளாய் ஒவ்வொருவரும் உம்மிடத்தில் வருகிறோம்.
அன்பான சகோதர,சகோதரிகளே, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கடவுளின் நியாயத்தீர்ப்பில் கணக்கு கொடுக்க வேண்டும் என்று  வாசிக்கிறோம்.
மத்தேயு 12:36-37.
நாம் நம் பேச்சிலும், வார்த்தையிலும், அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவர் என்று காண்கிறோம். யாக்கோபு 3:2.
கப்பலை பாருங்கள், அது எத்தனை பெரியதாக இருந்தாலும் கடுங்காற்றில் அடித்து செல்லப்பட்டாலும், கப்பல் ஓட்டுவர் சிறியதொரு சுக்கானைக்கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி கப்பலை திருப்புவார்கள். நம்முடைய நாக்கும் அதுபோல் நம் உடம்பில் மிக
சிறிய உறுப்பாக இருந்தாலும் பெரிய காரியங்களை சாதிப்பதாக பெருமை அடிக்கிறது.
அதுமட்டுமல்ல தீப்பொறியை போல் நாம் பேசும் தகாத வார்த்தைகளால் வாழ்க்கை சக்கரம் முழுவதையும், எரித்துவிடுகிறது.
அன்பானவர்களே, நல்ல நீரும், உவர்ப்பு நீரும், எப்படி ஒரே ஊற்றிலிருந்து சுரக்காதோ, இதைப்போல் நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளும் நன்மைக்காக மாத்திரம் இருக்கட்டும்.
இன்சொற்கள் தேன்கூடு போன்றவை மனத்திற்கு இனிமையானவை. உடலுக்கும் நலம் தரும். நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 16:24.
நாம் நம் நாவினால் எதை விதைக்கிறோமோ அதையே உண்போம். வாழ்வதும் நாவாலே,சாவதும் நாவாலே.
நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 18:20- 21.
நாவை காப்பவர் தம் உயிரையே காத்துக்கொள்கிறார்கள். நாவைக் காவாதவன் கெட்டழிவான்.
இனிய சொற்களை பேசி நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும்  மகிழ்விப்போம். இதுவே நம் ஆண்டவருக்கும் பிரியமாக இருக்கும். நம் சொல் வெள்ளித்தட்டில் வைத்த பொற்கனிக்கு சமமாகட்டும்.

ஜெபம்:
அன்பான தெய்வமே! எங்கள் நாவல்ல, உம்முடைய நாவே எங்களை புகழும்படி வாழ உதவி செய்யும். ஞானத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்ள உதவி செய்யும். எங்கள் வாயில் சொல் உருவாகும் முன்னே அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர். தீய எண்ணங்களும், சிந்தனைகளும், தோன்றா வண்ணம் காத்துக்கொள்ளும். எங்களை முன்னும்,பின்னும் சூழ்ந்துக் கொள்ளும். காத்தருளும்.
ஆமென்! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.