தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.
நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பெற்றோர் செய்த தச்சு தொழிலை நேசித்து தமது பெற்றோருக்கு கீழ்படிந்து அந்த தொழிலை செய்து வாழ்ந்து வந்ததாக நாம் வேதத்தில் வாசிக்கிறோம். வானத்தையும் பூமியையும் உருவாக்கிய தேவன் நான் எப்படி ஒரு தச்சு தொழிலை செய்வேன் என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக அந்த தொழிலை தமது பெற்றோருடன் செய்தார். இந்த நாளிலும் நாமும் நமக்கு ஆண்டவர் அவரவருக்கென்று ஒரு தொழிலையோ அல்லது வேறு ஏதாயினும் ஒரு பணியையோ கொடுத்து இருக்கலாம். நாமும் ஆண்டவரின் பிள்ளைகளாய் அவரின் மாதிரியை கடைப்பிடித்து நமக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவோம்.
நாம் அவ்வாறு நமக்கு கொடுத்த வேலையில் ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருப்போமானால் நாம் நீசருக்கு முன்பாக நிற்காமல் இராஜாக்களுக்கு முன்பாக நிற்கிறவர்களாய் இருப்போம். ஏனெனில்
கொஞ்சத்தில் உண்மையுள்ளவனை அநேகத்தின் மத்தியில் நம்மை கொண்டுவந்து நிறுத்துவார். நாம் நம்முடைய ஆண்டவருக்கு பயந்து நமது வேலையில் உண்மையோடு நடந்துக்கொண்டால்
ராஜாவின் தயை அதாவது நமது அதிகாரிகளின் தயை நமக்கு கிடைக்கும். நமது உண்மையை பார்த்து அவர்களே நம்மை உயர்த்தும்படிக்கு ஆண்டவர் நமக்கு அருள் புரிவார்.
நம்முடைய வேதமும் நமக்கு அவ்வாறே கற்பிக்கிறது. நாம் 1 பேதுரு 2ம் அதிகாரத்தை வாசித்துப் பார்ப்போமானால் அதில் நாம் எவ்வாறு நமது அதிகாரிகளுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களை தீயவர்கள் என்று பழித்துரைப்பினும் உங்கள் நற்செயல்களைக் கண்டு கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப்போற்றிப் புகழ்வார்கள். அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பணிந்திருங்கள். அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப்பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள். இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம். நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்: விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள். கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள். எல்லோருக்கும் மதிப்பு கொடுங்கள்: சகோதரர்,சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள் கடவுளுக்கு அஞ்சுங்கள்: அரசருக்கு மதிப்பு கொடுங்கள்.1 பேதுரு 2:12 to 17.
அன்பானவர்களே! சில சமயம் நாம் விரும்பாத பணியை செய்யும்படி நமக்கு ஒரு வேலை கிடைத்திருக்கலாம். அதிலும் நீங்கள் முறுமுறுக்காமல் உண்மையோடு நடந்துக்கொண்டால் ஆண்டவர் நிச்சயம் நீங்கள் விரும்பும் ஒரு வேலையை தருவார். அவரால் முடியாதது ஒன்றுமில்லையே. நமது ஆண்டவர் எப்படி பணிந்து கீழ்படிந்து வாழ்ந்தாரோ நாமும் நமது எல்லா பணியிலும் நமக்குள்ள வேலையில் எல்லோருக்கும் முழுமரியாதையோடு பணிந்து, நல்லவருக்கும், கனிந்த அன்புள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் முரட்டுக்குணம் உள்ளவர்களுக்கு பணிந்து நமது ஆண்டவர் அவரை சிலுவையில் அறைந்த பொழுதும் ஒரு வார்த்தையும் எதிர்த்து பேசாமல் தமது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியதுபோல் நாமும் நம் பணியிடத்தில் எப்பேற்பட்டவர்களாய் இருந்தாலும் பொறுமையோடு எல்லாவற்றையும் சகித்து ஆண்டவரின் முன்மாதிரியான அடிச்சுவட்டை பின்பற்றி நடந்து நமது ஆண்டவருக்கே மகிமையை சேர்ப்போம்.
ஜெபம்
அன்பே உருவான இறைவா! நாங்களும் உம்மைப்போல் எங்கள் பணியை உண்மையோடும், உத்தமத்தோடும் செய்ய எங்களுக்கு போதித்து வழிநடத்தும். உம்மைப்போல் அன்பையும், பொறுமையையும் கற்றுத்தாரும். உமது பிள்ளைகள் என்ற பெயரை எடுக்க உதவி செய்தருளும். எங்களுக்கு பெரிய வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படாமல் நீர் கொடுக்கும் எந்த பணியிலும் உண்மையோடு நடந்துக்கொள்ள உதவி செய்யும். அப்பா! போன ஏப்ரல் மாதம் முழுதும் எங்களோடு கூட இருந்து காத்து வழிநடத்தியதுபோல் இந்த மே மாதம் முழுதும் நீர் எங்களோடு கூடவே இருந்து எந்த பொல்லாப்பும் எங்களுக்கு நேரிடா வண்ணம் காத்து உமது இறக்கைக்குள் மறைத்து பாதுக்காத்துக்கொள்ளும். உமக்கே கோடாகோடி நன்றி பலிகளை எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து சொல்லிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே! ஆமென்!அல்லேலூயா!!!. .