நற்கருணை ஆண்டவர் நம் இயேசு.
அன்பானவர்களே! நம்முடைய நற்கருணையின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
நம்முடைய ஆண்டவர் பாலகனாய் இந்த உலகத்தில் தோன்றி நம் எல்லோருக்காகவும், ஏன் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு
மனுஷனுக்காகவும்,அவருடைய தோளில் சிலுவையை சுமந்து நம்
ஒவ்வொருவருடைய பாவத்துக்காகவும் சிலுவையில் அடிக்கப்பட்டு
கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் நமக்காக சிந்தி அவரின் உயிரை
கொடுத்து நம்மை மீட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.எசாயா
53ம் அதிகாரத்தை முழுதும் வாசித்து பார்த்தால் நன்கு புரியும்.
பிரியமானவர்களே! இப்படிப்பட்ட ஆண்டவரை நாம் தெய்வமாக
கொண்டுள்ளது எத்தனை விசேஷித்தவர்கள் நாம்.அவருடைய
உடலை அப்பமாகவும்,அதாவது நற்கருணையாகவும்,அவர் இரத்தத்தை திராட்சரசமாகவும் பருகும் நாம் அவரின் எண்ணங்களின்படி வாழ்கிறோமா? என்று யோசித்து பார்ப்போம். இதை ஏன்
சொல்கிறேன் என்றால் ஒரே இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்குள் எத்தனை பிரிவினைகள், எத்தனை ஜாதிகள்?. அவர் உடல் என்ன ஜாதியோ, நாம் எல்லாரும் அந்த ஜாதியே! அவரின் இரத்தம் என்ன மதமோ, நாம் எல்லோரும் அந்த மதமே. கிறிஸ்துவர்கள் என்று பெயர் அளவில் வாழாமல் அவரின் கோட்பாடுகளை கைக்கொண்டு நடந்து வாழ்வு தரும் மரத்தின்மீது உரிமைக்கொண்டு அவர் காட்டும் வாயில் வழியாக நுழைபவர்களாய் மாறுவோம். திருவெளிப்பாடு 22:14.
நாம் அறியாமல் செய்யும் பாவங்களை ஆண்டவர் மன்னிப்பார். ஆனால் அறிந்தும் பாவம் செய்தால் அதற்குரிய தண்டனையை நாம் அடைந்தே தீரவேண்டும். மற்ற உலகமக்கள் போல் நாம் வாழாமல் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக வாழ்ந்து நம் ஆண்டவரின் புகழை இந்த பூமியில் நிலைநாட்டுவோம். இதோ! விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு கடவுள் அளிக்கும் கைம்மாறு என்னிடம் [அவரிடம்] உள்ளது. திருவெளிப்பாடு 22: 12.
வாழ்வு தரும் உணவாய் வந்த அவரின் சதையாகிய அப்பத்தை புசிப்பவர்களாய் மாத்திரம் இனி இல்லாமல் அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து நடந்து அவரின் திருச்சட்டத்தை நிறைவு செய்வோம்.
நாள் பார்ப்பது, நேரம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது, குறி கேட்பது இதுவெல்லாம் நம் ஆண்டவருக்கு அருவருப்பான காரியம். எனக்கு தெரிந்து அநேக கிறிஸ்துவர்கள் இந்த தவறை செய்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் விவிலியத்தை ஒழுங்காக வாசிக்காததால்தான். லேவியர் 19:26 மற்றும் இணைச்சட்டம் 18:10 to 13ல் உள்ள வசனத்தை தயவுசெய்து வாசித்து பாருங்கள். அப்பொழுது நீங்கள் செய்யும் அருவருப்பான காரியம் உங்களுக்கே தெரியும்.
நாம் யாராயிருந்தாலும் வேதத்தை தினந்தோறும் வாசிப்போமானால் நாம் செய்யும் எல்லா காரியத்துக்கும், வேலைக்கும் அதில் அழகான பதில் இருக்கிறது. அதனால்தான் தாவீது 119ம் திருப்பாடலில் ருசித்து ரசித்து எழுதியிருக்கிறார். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:98 to 104.
அன்பானவர்களே! இதுவரை நீங்கள் வேதத்தை வாசிக்கவில்லை என்றால் பரவாயில்லை. இனி வாசித்து அதின் பயனை பெற்றுக்கொள்ளுங்கள். இயேசு என்றால் யார் என்றே தெரியாத குடும்பத்தில் பிறந்து 20 வயது வரைக்கும் விக்கிரங்களை வழிப்பட்ட எனக்கு அவரின் அன்பை புரிய வைத்து, அவரே உண்மையான தெய்வம் என கண்டுக்கொள்ள செய்து அதோடு மட்டுமல்ல என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்து வேதத்தின் மகத்துவங்களை அறியும்படி
செய்து என்னை அழகாக கரம் பிடித்து வழி நடத்தி வருகிறார். எனக்கு ஏற்படும் எல்லா சோதனைகளிலிருந்து என்னை விடுவித்து பாதுகாத்து வருகிறார். அந்த சோதனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லிக்கொடுத்து, தீமையை நன்மையாக மாற்றி வழி
நடத்தி வருகிறார். எனக்கே இத்தனை நன்மைகளை செய்யும் ஆண்டவர் உங்களுக்கு செய்வது அதிக நிச்சயம் அல்லவா? பிள்ளைகளுக்கு உரிய உணவை என் போன்ற நாய்க்குட்டிக்கு போடும் போது உங்களுக்கு போடுவது கடவுளுக்கு எத்தனை பிரியம் என்று யோசித்து பாருங்கள்.
மத்தேயு 15:24 to 28.
மத்தேயு 15:24 to 28.
ஜெபம்
அன்பே உருவான இறைவா! எங்களுடைய பாவ, சாப , கறை அழுக்கு யாவும் போக்க உம்மையே உயிருள்ள பலியாக நற்கருணையின் அப்பமாக கொடுத்தீரே! அதை நாங்கள் ஒருபோதும் மறவாமல் உமக்கு பயந்து, கீழ்படிந்து நீர் விரும்பும் பிள்ளைகளாய் வாழ எங்களுக்கு போதித்து வலக்கரம் பிடித்து வழிநடத்தும். உமது வார்த்தைகளை அனுதினமும் வாசித்து நீர் காட்டும் பாதையில் நடக்கும்படி செய்யும். எல்லா மக்களையும் நேசித்து உமது அன்பை பகிர்ந்துக்
கொள்ள உதவிச் செய்யும். பரலோகத்தில் உள்ள சமாதானம் பூமியில் உள்ள மக்களும் கண்டு உணர்ந்துக்கொள்ள இதயத்தில் உணர்த்தும். பரிசுத்தமாய் வாழ்ந்து உமக்கு புகழை உண்டு பண்ண
உம்மை அறியாத மக்களும் எங்கள் நல்ல நடத்தையால் உம்மண்டை கொண்டுவர உதவி செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!
ஆமென்!! அல்லேலூயா!!!
ஆமென்!! அல்லேலூயா!!!
(சாரா)