எல்லா மக்களையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி நம் இயேசு.
அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் அன்பான நல்வாழ்த்துக்கள்.
கடவுள் மனித அவதாரம் எடுத்து நம்மை மீட்கும் பொருட்டு இந்த உலகில் பிறந்து வளர்ந்து பலப்பல நன்மைகளை செய்து கடைசியில் தம்முடைய உயிரையும் கொடுத்து சிலுவையில் அடிக்கப்பட்டு ஈட்டியால் குத்தப்பட்டு மரித்தார் என்று வாசிக்கிறோம். இதை எல்லாம் ஏன் செய்தார்? இருளில் இருக்கும் நம் ஒவ்வொருவரையும் ஒளியினிடத்திற்கு அழைத்து செல்லவே இவ்வாறு செய்தார். ஆனால் நாமோ ஒளியான அவரை அறிந்துக்கொள்ளாமல் இருக்கிறோம்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கே கடவுளாகவும் இருந்தது. அனைத்தும் அவரால் உண்டாயின. அவரால் இன்றி எதுவும் உண்டாகவில்லை. அவரிடமே வாழ்வு இருந்தது. அவ்வாழ்வே மனிதருக்கு ஒளியாக இருந்தது. ஒளியாக வந்த அவர் இருளை விரட்டி அடித்தார். இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் வாழ்வளிக்கும் தெய்வமாக வந்த அவரை ஏற்றுக்கொண்டு நாமும் இந்த தவக்காலத்தில் அவர் விரும்பும் செயல்களை செய்து அவரின் நாமத்திற்கே மகிமை சேர்க்க கடனாளியாக இருக்கிறோம்.
அன்பானவர்களே நாம் யாவரும் அவரின் வார்த்தையாகிய வாக்குகளை கடைப்பிடித்து அவர் தரும் தீர்ப்பில் அவர் அருகே அமரும் செல்லக் குழந்தைகளாய் மாறுவோம். மானிட மகன் மாட்சியுடன் வரும்பொழுது நாம் யாவரும் அவர் முன்னிலையில் ஓன்று சேர்க்கப்படுவோம். நம் செயலுக்கு ஏற்ப நம்மை வெள்ளாடுகளாகவும், செம்மறி ஆடுகளாகவும் பிரிக்கும் பொழுது நாமும் அவர் விரும்பும் செம்மறி ஆடுகளாய் அவரின் வலப்பக்கத்தில் நின்று தந்தையிடம் ஆசீர் பெற்று மகிழ்வோம். அதற்கு நாம் செய்ய வேண்டியது பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து, தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்து அன்னியனாக இருப்பவர்களை நேசித்து, ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை கொடுத்து நோயுற்று இருப்பவர்களை நன்றாக கவனித்து, சிறையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து கடவுள் விரும்பும் செம்மறி ஆடுகளாய் வாழ்ந்து அவருக்கே மகிமை சேர்த்து அவருடன் ஆட்சி செய்ய நேர்மையாளராய் மாறுவோம். இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் இந்த நல்ல செயல்களில் ஈடுபட்டு நிலைவாழ்வை பெற்றுக்கொள்வோம்.
உலகில் உள்ள எந்த சோதனைக்கும் மனம் தளராமல் அவருடன் பாடுபட்டு அவருடன் ஆட்சி செய்வோம். வருகிற 40 நாளிலும் நம் உடைகளை அல்ல இருதயத்தை கிழித்து அவர் முன் பணிந்து
அவரை நோக்கி பார்த்து நம் அன்பை வெளிப்படுத்துவோம். அவர் நமக்காக பட்ட பாடுகளை நோக்கி பார்த்து அவரைப்போல் மாறுவோம். நம்முடைய இச்சையின்படி நடவாமல் அவர் விரும்பும் பாத்திரமாக மாறுவோம். நம் பெலவீனத்தில் அவர் பெலன் முழுதும் பெற்று பூரணமாமாக வாழ்வோம்.
ஜெபம்
அன்பின் ஆண்டவரே!இந்த உலகிற்கு ஒளியாக வந்தவரே உம்மை வணங்குகிறோம், போற்றுகிறோம். இந்த தவக்காலத்திலும் நாங்கள் எங்கள் மன விருப்பப்படி வாழாமல் உம்முடைய சித்தம் அறிந்து அதன்படியே வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்த உதவிச் செய்யும். எல்லோரையும் நாங்களும் நேசித்து உம் அன்பை வெளிப்படுத்த போதித்தருளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே! ஆமென்! அல்லேலூயா!!!