நான் உங்களை மறக்கவே மாட்டேன்
எனக்கு பிரியமான ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள்.
போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகத்தில் வாழும் நாம் பல நேரங்களில், என்மேல் அன்பு காட்ட யாரும் இல்லையே என்றும் எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லையே என்று ஏங்கித்தவிக்கிறோம். தனிமையில் வாடும் உங்களை இன்று நம்முடைய ஆண்டவராகிய மீட்பர் என் மகனே! என் மகளே! என்றும் அன்பு செல்லங்களே! நீங்கள் ஏன் மனம் கவலைப்படுகிறீர்கள்? ஏன் தவிக்கிறீர்கள்? இதோ உங்களுக்காக நான் இருக்கிறேன். உங்கள் தேவைகளை எல்லாம் சந்தித்து உங்களை காப்பாற்ற நான் காத்திருக்கிறேன்என்று சொல்கிறார்.
பால்குடிக்கும் தன் பிள்ளையை ஒரு தாய் மறப்பாளோ? கருவில் சுமந்த தன் குழந்தை மீது இரக்கம் காட்டாமல் இருப்பாளோ? ஒருவேளை அந்த தாய் மறந்தாலும் நான் உங்களை மறக்கவே மாட்டேன் என்று இன்று நமக்கு வாக்கு அளிக்கிறார். எசாயா 49:15. இதோ நான் உங்களை என் உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளேன். உங்கள் பாதைகள் எப்பொழுதும் என் கண்முன்னே இருக்கிறது என்று கூறுகிறார். ஏசாயா 49:16. இவ்வாறு வாக்கு அளித்துள்ள நம் தேவன் ஒருபோதும்
உங்களை மறக்கவே மாட்டார். உங்கள் காரியங்கள் எதுவாயினும் அதை நிறைவேற்றி தருவார். அதை பெற்றுக்கொள்வது உங்கள் ஒவ்வொருவரின் கையில்தான் உள்ளது. கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான். நீங்களும் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு அதை கொடுப்பார்.
ஒருவேளை கடவுள் உங்களை மறந்தால் அது எப்படிப்பட்டது என்று அவர் சொல்வதை காணுங்கள். எருசலேமே! [என் மக்களே ] நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக!! என்று நம்மை எவ்வாறு தேற்றுகிறார் பாருங்கள். திருப்பாடல்கள் 137:5 . இப்படிப்பட்ட ஆண்டவர் நமக்கு இருக்கும் பொழுது நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? உங்கள் ஆண்டவர் எவ்வளவு வல்லமை உள்ளவர் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். நீங்கள் நம்பும் கடவுள் யார்? ஒரு மரமோ அல்லது ஒரு கல்லோ இல்லை என்றென்றும் உயிரோடு இருக்கும் ஜீவன் உள்ள தெய்வம். ஆகையால் நாம் அவரை மறக்காமல் அவரை நோக்கி கூப்பிட்டால் அவர் நமக்கு கிருபை அளிப்பார்.[ஒரு கன்னிப்பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.] ஏசாயா 2:32.
நாம் அவரை மறந்து வாழ்ந்துக்கொண்டு, அவரிடம் ஒன்றும் கேட்காமலேயே முறுமுறுக்கிறோமா? யோசித்துப்பாருங்கள். நாம் அவரை மறக்காத பட்சத்தில் அவரும் நம்மை மறக்கவே மாட்டார். நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் அதில் ஒன்றையேனும் ஒருபோதும்
மறக்கமாட்டார். ஆமோஸ் 8:7. உயிரையே கொடுத்த நம் ஆண்டவர் மற்ற எல்லாவற்றையும் கொடுக்க மறக்கவே மாட்டார். நம்புங்கள். ஆசீர்வாதத்தை பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே! தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே நீர் எங்களை பெயர் சொல்லி அழைத்திருக்கிறீர். எங்கள் கருவையும் உமது கண் கண்டிருக்கிறது. நரம்புகளும், எலும்புகளும் உருவாகும் முன்னே நீர் எங்களை அறிந்திருக்கிறீர். உமக்கு மறைவானது ஒன்றும் இல்லை. யார் எங்களை கைவிட்டாலும் நீர் ஒருபோதும் கைவிடாத தேவன். இதை நாங்கள் ஒருபோதும் மறக்காமல் உம்மையே அண்டிக்கொள்ள உதவி செய்யும். நீர் எங்களை மறவாமல் காக்கிற தெய்வமாய் இருப்பதால் நாங்கள் யாவரும் உமக்குள் மகிழ்ந்து வாழபோதித்து வழிநடத்தும். எங்களை மறவாத தேவனிடத்தில் கெஞ்சிக்கேட்கிறோம் எங்கள் பரம பிதாவே!ஆமென், அல்லேலூயா!!!