உங்கள் கண்ணீரை கண்டேன்
அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நம் தூயவரும், நம் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: பயனுள்ளவற்றை நமக்கு கற்பித்து நாம் செல்லவேண்டிய வழியில் நம்மை நடத்தும் கடவுள் நம் கண்ணீரை ஆற்றி, நம் நிறைவாழ்வை ஆற்றைப்போலும், நமது வெற்றியை கடலலைபோலும் பாய்ந்து வரும்படி செய்து நம் வழிமரபினர் மணல் அளவாயும், நமது வழித்தோன்றல் கதிர்மணிகள் போலவும் நிறைந்திருக்க செய்து அவர் திருமுன் நம்மை வைத்து பாதுகாப்பதாக சொல்கிறார். வானங்களே,
மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார் எசாயா 49:13.
அரியணையில் வீற்றிருக்கும் நமது ஆண்டவர் நம்மை பாதுகாத்து பசியோ, தாகமோ நம்மை தாக்காமல் அவரே நம்மை மேய்த்து வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்தி சென்று நம் கண்ணீர் யாவையும் துடைப்பேன் என்கிறார். திருவெளிப்பாடு 7:15,17. இரவும், பகலும் நமக்காக அவரின் தந்தையிடம் ஜெபித்து நமது விருப்பங்களை நினைத்து நம் கண்ணீரை ஞாபகம் வைத்து நாம் சந்தோஷத்தால் நிறையும்படி செய்கிறார்.
இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது மார்த்தா, மரியா அவர்கள் சகோதரன் இலாசர் ஆகியவர்களிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஆனால் இலாசரு மரித்தபொழுது இயேசு கண்ணீர் விட்டார் என்று யோவான் 11:35ல் வாசிக்கிறோம். அவர்கள் கண்ணீரை கண்ட ஆண்டவர் அவர்கள்மேல் மனதுருகி மரித்து அடக்கம் செய்த இலாசருவை உயிரோடு எழுப்பி அவர்கள் கண்ணீரை துடைத்து தமது வல்லமையை நிலைநாட்டினார். இப்பொழுதும் அன்பானவர்களே நமது ஏக்கங்களையும், கண்ணீரையும் காண்கிற கடவுளாய் நம் அருகில் இருக்கிறார். அவரிடத்தில் பட்சபாதம் இல்லை. யார் அவரை உண்மையோடு அழைத்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறார். ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நீ அறியாததும், உனக்கு எட்டாததுமான பெரிய காரியத்தை உனக்கு செய்வேன். அப்பொழுது நீ என் நாமத்தை மகிமைப்படுத்து என்று சொல்கிறார். நாமும் அவரையே நோக்கி கூப்பிட்டு நமது தேவைகள் யாவற்றையும் சொல்லி நமது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
அதற்கு நாம் செய்யும் காரியத்தை விரும்புகிறார். மரியா எப்படி இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அழுதுகொண்டே அவருடைய பாதங்களை தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து தொடர்ந்து அவர் பாதத்தை முத்தமிட்டு, அப்பாதத்தில் நறுமண தைலம் பூசினார்களோ அதுபோல் நாமும் அவர் பாதத்தை முத்தமிட்டு நம் தேவைகளை கண்ணீரோடு அவர்முன் வைத்து நம்மையே அவருக்கு பலியாக ஒப்புக்கொடுத்தால் நாம் விரும்புவதற்கும், நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாக செய்வார் என்பதில் ஐயமுண்டோ!!!!!
ஜெபம்
அன்பின் இறைவா! எங்கள் கண்ணீரை காண்பவரே, உம்மை துதிக்கிறோம், போற்றுகிறோம். குப்பையில் இருந்து எங்களை உயர்த்துகிறவர் நீரே, உமது மகிமை வானங்களுக்கு மேலானது. உமது வார்த்தையை அனுப்பி எங்களை குணமாக்கி, அழிவுக்கு தப்புவிக்கறவர் நீரே. மனுஷரின் உதவியை நாடாமல் உம்மையே நோக்கி பார்த்து காத்திருக்கிறோம். தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குவது போல உமக்கு பயந்து வாழும் எங்கள்மேல் இரக்கமாயிரும். நாங்கள் தூசிக்கு சமமானவர்கள் என்று நீர் அறிந்திருக்கிறீர். உமது முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்க செய்து, எங்கள் குற்றங்களை மன்னித்து எங்கள் பாவங்களை நினையாமல் எங்கள்மேல் கிருபையாயிரும். உமக்கே துதி, கனம், மகிமை உண்டாகட்டும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!! அல்லேலூயா!!!