பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்
பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் வரிதண்டுபவர்கள். காரணம் ஏழை, எளிய மக்களை சுரண்டி அதிகச்சுமைகளை அவர்கள் மீது இந்த வரிதண்டுபவர்கள் திணித்ததால் தான். பாலஸ்தீனம் இயேசு வாழ்ந்த காலத்தில் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தது. இப்போது நம்முடைய பழக்கத்தில் உள்ள குத்தகை முறை தான், உரோமையர்களின் காலத்திலும் இருந்தது. அதாவது, குறிப்பிட்ட ஒரு மகாணத்திற்கு அங்குள்ள மக்கள்தொகை அடிப்படையில், இவ்வளவு குத்தகைப்பணம் என்ற அளவில் ஏலம் விடப்பட்டது. யார் அதிக ஏலத்திற்கு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்தத்தொகையை செலுத்திவிட்டு, அந்த மகாணத்தில் வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்றுக்கொள்வார்கள். இந்த வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்ற ஒப்பந்தக்காரர்கள் சில வேலையாட்களை பணியமர்த்தி, மக்களிடத்தில் வரிவசூலித்து பணத்தைப்பெற்று வந்தனர். இதில் தான் நிறைய முறைகேடுகள் நடந்து வந்தன. அவர்கள் மனம்போல் வரிகளை மக்கள் மீது திணித்தனர். முறையான, நியாயமான, ஒழுங்கான வரிவசூலிக்காமல் தங்கள் சுயஇலாபத்திற்காக மக்களை சுரண்டிப்பிழைக்கிறப் பணியை வரிதண்டுபவர்கள் செய்து வந்தனர். எனவேதான், மக்கள் மத்தியில் அவர்களைப்பற்றி வெறுப்பு மேலோங்கியிருந்தது....