மனிதம் மலர நம்மால் இயன்றதைச்செய்வோம்
யூத இனம் ஆண் ஆதிக்க சமுதாயச்சிந்தனை கொண்டது. பெண்களும், குழந்தைகளும் வெறும் பொருட்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கென்று எந்தவித உரிமையும் கிடையாது. அப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்த இயேசு நமக்கு புதிய படிப்பினையைத்தருகிறார். தான் ஆணாதி்க்கச்சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அந்த ஆணாதிக்கச்சிந்தனைகள் தன்னை நெருங்குவதற்கு, இயேசு ஒருபோதும் அனுமதித்தது இல்லை. மனிதர்கள் ஒவ்வொருவரும் மதிக்கப்படக்கூடியவர்கள் என்பதுதான் அது. நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடத்திலே கொண்டுவந்தவர்கள் குழந்தைகளின் தாய்மார்களாகத்தான் இருக்க வேண்டும். இயேசு அவர்களை அன்போடு வரவேற்கிறார். அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார். அவர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள். நம் அனைவருக்கும் அவர்தான் தந்தை. அப்படியிருக்க இந்த சமுதாயப்பாகுபாடுகளில் எப்படி உண்மை இருக்க முடியும்? அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சீடர்கள் ஆணாதிக்கச்சிந்தனையை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இயேசு அந்த சிந்தனையை முற்றிலுமாக எதிக்கிறவராக இருக்கிறார். மற்றவர்களை அடிமைப்படுத்துகிற எந்தவொரு வேறுபாடும், நொறுக்கப்பட வேண்டும். நாமும், இயேசுவைப்பின்பற்றி வேறுபாடுகளைக்களைவோம். மனிதத்தை உயர்த்திப்பிடிப்போம்....