இழப்பே மகிழ்வு !
மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும். ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூட! இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்கிறார். இயேசுவின் பொருட்டுக் கடந்த 21 நுhற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் தம் உயிரை இழக்க முன்வந்துள்ளனர். நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டுள்ளனர். நாம் உயிரை இழக்க வேண்டாம். சிறிய இன்பங்களை, சிறிய ஆதாயங்களை, நேரத்தை, ஓய்வை, பொழுதுபோக்கை இழக்க முன்வருவோம். மன்றாடுவோம்;...