மிகப்பெரியவர் யார்?
”விண்ணரசில் மிகப்பெரியவர் யார்?” என்பது சீடர்களின் கேள்வி. இயேசுவின் பதில் ”மனந்திரும்பி சிறுபிள்ளைகள் போல் ஆக வேண்டும்”. இயேசுவின் இந்தப்பதில் சீடர்கள் விண்ணரசிற்கு வெளியே இருப்பதைச்சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. வாழ்வில், மனிதர்கள் எதை எதிர்பார்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள் என்பது முக்கியம். அது பதவியையா? அதிகாரத்தையா? பணத்தையா? இன்பத்தையா? இவை அனைத்தும் விண்ணரசில் நுழைவதற்கு தடைக்கற்கள். அப்படியென்றால் வி்ண்ணரசிற்கு நுழைவது எப்படி? நாம் அனைவரும் சிறுபிள்ளைகளாக மாற வேண்டும். சிறுபிள்ளைகளிடத்தில் மூன்று முக்கியமான பண்புகள் காணப்படுகிறது. 1. தாழ்ச்சி. குழந்தைகள் எப்போதுமே தங்களை முன்னிறுத்திக்கொள்வதில் எள்ளளவும் பிரியப்பட மாட்டார்கள். அவர்கள் மறைவாக, பின்புலமாக இருந்து செயல்படுவதைத்தான் விரும்புவார்கள். வளர்ந்தபிறகு போட்டி உலகில் நுழைந்தபிறகு தான், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். 2. சார்ந்திருத்தல். மற்றவர்களைச் சார்ந்திருத்தல் என்பது குழந்தைகளில் இயல்புகளில் ஒன்று. மற்றவரை சார்ந்திருந்து வாழ்வை எதிர்கொள்கிறார்கள். அவர்களை அன்பு செய்கிறவர்கள் மட்டில், அவர்கள் மகிழ்வோடு சார்ந்திருக்கிறார்கள்....