நம்மை உயிர் வாழச்செய்தவரும் அவரே
திருப்பாடல் 66: 8 – 9, 16 – 17, 20 ”நம்மை உயிர் வாழச்செய்தவரும் அவரே” திருப்பாடல் 66 ஒரு நன்றிப்பாடல். இது குறிப்பிட்ட நிகழ்வை வைத்து எழுதப்பட்ட பாடல் அல்ல. மாறாக, கடவுள் செய்து வந்திருக்கிற நன்மைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று, நம்மை உந்தித்தள்ளுகிற ஒரு பாடல். எல்லா மக்களுமே கடவுளைப் போற்றிப் புகழ அழைக்கப்படுகிறார்கள். இந்த திருப்பாடலின் சிறப்பு, தனிப்பட்ட முறையில் இறைவன் தனக்கு செய்திருக்கிற நன்மைகளை நினைத்து, தாவீது அரசர் பாடுவதாக இது சொல்லப்படுகிறது. அவருடைய துன்ப வேளையில் இறைவன் எவ்வாறெல்லாம், அவரைப் பேணிப்பாதுகாத்தார் என்பதுதான் இந்த திருப்பாடலின் மையச்சிந்தனையாக இருக்கிறது. மக்களினங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழ வேண்டும் என்று ஆசிரியர் அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பு எல்லா மக்களுக்கும் என்றாலும், குறிப்பாக இஸ்ரயேல் மக்களுக்கான அழைப்பாக இது பார்க்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக, இந்த அழைப்புவிடுக்கப்படுகிறது. முதல் காரணம், கடவுள் இஸ்ரயேல் மக்களை பல்வேறு...