எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக
திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9 இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே...