கடவுளின் மக்கள்
திருமுழுக்கு யோவான் அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார். திருமுழுக்கு என்பது யூதர் அல்லாத புறவினத்தவர் யூத மதத்திற்கு வருகிறபோது நிறைவேற்றக்கூடிய ஒரு சடங்கு. அந்த சடங்கை அனைவருக்கும் கொடுப்பதன் வழியாக, யூதர்களையும் அவர் புறவினத்து மக்களாக, இன்னும் கடவுளுக்குள் வராத மக்களாகவே பார்க்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கிறது. ஆக, வெறும் பிறப்போ, அருள் அடையாளங்களோ நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றிவிடாது. மாறாக, உண்மையான வாழ்வே, நமக்கு கடவுளின் அருளைப் பெற்றுத்தரும். விரியன் பாம்புக்குட்டியை திருமுழுக்கு யோவான் உவமையாகச் சொல்கிறார். விரியன் பாம்புகளை ஒருவருக்கு ஒப்பிட்டுச்சொன்னால், அவரை அவதூறாகப் பேசுவதற்குச் சமம் என்ற கருத்து, மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவி வந்த நம்பிக்கை. விரியன் பாம்புக்குட்டிகள் என்று சொல்வது அதைவிட மோசமான வார்த்தை. காரணம், விரியன் பாம்புக்குட்டிகள் தங்களது தாயை பிறக்கிறபோது, கொன்றுவிடும். அதேபோல யூத சமயத்தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற மக்களை, அவர்களே தவறான வாழ்க்கையை வாழக்கூறி, அவர்களை அழித்துவிடுகிறார்கள் என்று உவமையாகச் சொல்லப்படுகிறது....