வாக்கு மாறாத இறைவன்
திருத்தூதர் பணி 13: 26 – 33 கடவுள் வாக்கு மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பது தான், தூய பவுலடியார் நமக்கு சொல்ல வருகிற செய்தியாகும். கடவுள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்திருந்தார். அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க மீட்பரை அனுப்புவேன் என்று, இறைவாக்கினர்கள் வாயிலாக முன்னறிவித்திருந்தார். இஸ்ரயேல் மக்களும், இறைவன் தங்களுக்கு கொடுக்கவிருந்த மீட்பருக்காக காத்திருந்தனர். அந்த மீட்பர் தான் இயேசு என்று, பவுலடியார் சொல்கிறார். இயேசுவின் வருகை, இறைவனுடைய வாக்குறுதி முழுமையாக நிறைவேறியிருப்பதை உணர்த்துகிறது என்பதுதான், அவருடைய செய்தியாக இருக்கிறது. மனிதர்கள் கடவுளிடத்தில் பல உடன்படிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். ஆனால், வெகு எளிதாக கடவுளோடு செய்து கொண்ட உடன்படிக்கையை உடைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல. கடவுள் வல்லமையுள்ளவராக இருந்தாலும், வாக்குறுதி மாறாதவராக இருக்கிறார். பொதுவாக, வலிமை படைத்தவர்கள் தான், உடன்படிக்கையை மீறுகிறவர்களாக இருப்பார்கள். தங்களின் அதிகாரத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவரல்ல....