சோதனைகளிலும் மாதா இறைவனோடு இணைந்திருந்தார்
மாதாவின் வணக்க மாதத்தையொட்டிய சிறப்புக் கட்டுரை திருவிவிலியம் தூய கன்னி மரியாவைப் பேறு பெற்றவர் என்று எதனால் அழைக்கின்றது? மாதா கூட தாம் பேறுபெற்றவர் என்றும், எல்லாத் தலைமுறையினரும் தம்மைப் பேறுபெற்றவர் என்று அழைப்பர் என்றும் கூறுகின்றார். (லூக் 1 : 48). வேறு எவருக்கும் கிடைக்காத நான்கு அருளை ஆண்டவர் மாதாவுக்குக் கொடுத்தார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவைக் குறித்து நான்கு மறையுண்மைகளைப் போதிக்கின்றது. அவை முறையே மாதா இறைவனின் தாய். நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த அமலோற்பவ மாதா மற்றும் விண்ணேற்பு அடைந்தவர். இந்த மாபெரும் அருளைப் பெற்றதால் அல்ல அவர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுவது. மாறாக அவரது நம்பிக்கையால்தான். ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). யோவான் நற்செய்தியில் இயேசு இரண்டு நற்பேற்றைக் குறித்து கூறியுள்ளார். ஒன்று : பிறருக்குச் செய்யும் சேவை (13 : 17);...