இயேசுவின் பார்வையில் புனிதம்
புனிதம் என்ற பெயரில் மனிதத் தேவையை பொருட்படுத்தாது விடுவது, அந்த புனிதத்தை மாசுபடுத்துகின்ற செயல் என்பதை, இன்றைய நிகழ்ச்சி மிக அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. புனித பொருட்களை மற்றவர்களின் தேவைக்கு பயன்படுத்துவது தான், அந்த புனிதப்பொருட்களுக்கான உண்மையான விலை. இன்றைய நாளில் ஓய்வுநாளில் பசியாயிருந்த சீடர்கள் கதிர்களைப் பறித்து உண்கிறார்கள். பரிசேயர்கள், ஓய்வுநாளை மீறிய செயலாகப் பார்க்கிறார்கள். அதனைக் கண்டிக்கிறார்கள். குற்றம் காண துடிக்கிறார்கள். ஆனால், இயேசு புனிதம் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நமக்கு எடுத்துரைக்கிறார். பொதுவாக, குழந்தைகள் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டனர். காரணம், ஆலயங்களும், அதனைச்சார்ந்த இடங்களும் பாரம்பரியத்தையும், புனிதத்தையும் பறைசாற்றுவதாக நினைத்தனர். அங்கே குழந்தைகள் அதன் புனிதத்தன்மையை கெடுத்துவிடுவார்கள் என்று மக்கள் நினைத்தனர். எனவே, அவர்கள் தடைசெய்யப்பட்டனர். ஆனால், புனித நாளோ, புனித பொருட்களோ மனிதத்தேவையை நிறைவு செய்கிறபோதுதான், புனிதத்தன்மையைப் பெறுகிறது. பலிக்கு வைக்கப்படுகிற அப்பம், பசியாயிருக்கிறவனுக்குக் கொடுக்கப்பட்டால், அதுதான் உண்மையான பலி....