இயேசுவின் பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலி
(இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும், புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் இடம் பெறுகின்றன. பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது வாசிக்கவேண்டும்: மிகவும் முக்கியமான காரணங்களுக்காக இதை இரண்டாக்கலாம். ஆனால் யாத்திராகமம் 14ஆம் அதிகாரத்தை ஒருபோதும் விட்டுவிடலாகாது.) தொடக்க நூலிலிருந்து வாசகம்: தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும்...