அனைத்து ஆன்மாக்கள் திருவிழா
நவம்பர் மாதம் ஆன்மாக்களின் மாதம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாம் தேதி, அகில உலக திருச்சபை ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாட நமக்கு அழைப்புவிடக்கிறது. அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாள், மற்ற விழாக்களைப் போன்றோ, பெருவிழாக்களை போன்றதோ அல்ல. இந்த விழாவிற்கென்று தனித்தன்மை இருக்கிறது. இறந்து போன ஆன்மாக்களை நாம் இந்த நாளில் சிறப்பாக நினைவுகூா்ந்தாலும், வழிபாட்டு ஆண்டின் தரத்தில், மிக முக்கியம் வாய்ந்த, ஆண்டவரின் விழாக்களில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது. அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது.
பழங்காலத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கம், அனைத்து சமயங்களிலும் இருந்தது. இந்த பழக்கமே, நாளடைவில் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தோன்றியிருக்கலாம். இதனைப்பின்பற்றி தான், இறந்தவர்களுக்காக இறைவேண்டல்களும், திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆயரான இசிதோர் கி.பி. 636 ல், இறந்தவர்களுக்கென்று ஒருநாளை ஒதுக்கி, அவர்களுக்காக மன்றாடும் முறையை ஏற்படுத்தினார். இது நாளடைவில் பல துறவி மடங்களிலும், அதிலும் குறிப்பாக தொமினிக்கன் துறவற மடங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கி.பி. 15 ம் நூற்றாண்டில் இருந்தே, நவம்பர் இரண்டாம் நாள் மூன்று திருப்பலி கொண்டாடும் பழக்கமானது தொடங்கப்பட்டது. திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்களால் இது அங்கீகாரம் பெற்றது. நவம்பர் இரண்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமையாக வந்தாலும், அன்று இந்த விழா கொண்டாடப்படும். இதிலிருந்து, இதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த மாதத்தில், நமது குடும்பத்தில் இறந்து முன்னோர்களை, நமது நண்பர்களை சிறப்பாக நினைத்து, அவர்களுக்காக, திருப்பலி ஒப்புக்கொடுத்து, செபிப்போம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்