வேலைக்கு ஆட்கள் தேவை
மத்தேயு 18:1-5,10,12-14
இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் பல கடைகளிலே “வேலைக்கு ஆட்கள் தேவை” என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்திருக்கிறோம். அந்த பலகையைப் பார்த்து ஆட்கள் வேலைக்கு செல்வது உண்டு. அதே போன்று இன்றைய நற்செய்தி வாசகமும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்போடு வருகின்றது. என்ன வேலை? எப்படி செய்ய வேண்டும்? எவ்வளவு சம்பளம்? என்பதையும் விவரிக்கிறது.
என்ன வேலை?
நாம் நினைப்பது போன்று இது மனிதர்களால் தரப்படும் வேலை அல்ல. மாறாக இது இறைவனால் தரப்படுகின்ற பணி. எனன வேலை? இறைவனின் அன்பிலிலிருந்து விலகி சென்றவர்களை அவரிடம் கொண்டு வர வேண்டும், பாவங்களால் காணாமல் போனவர்களை பக்குவப்படுத்த வேண்டும், நெறி தவறியவரை மீட்க வேண்டும் இதுதான் வேலை. இதை நாம் அனைவரும் நம் குடும்பத்தில், அன்பியத்தில், பணியிடத்தில், படிக்குமிடத்தில், ஊரில் செய்ய வேண்டும்.
எப்படி செய்ய வேண்டும்?
இந்த வேலையை விரும்பி செய்ய வேண்டும். மனதார செய்ய வேண்டும். என் சகோதரன் அல்லது சகோதரி தவறான பாதையில் அல்லது நெறிதவறி செல்கின்ற போது என்னுடைய தலையாய கடமை அவர்களை நெறிப்படுத்துவது. நான் ஒரு நெறியாளாராக செயல்பட வேண்டும். அதைத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில், “இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத்தந்தையின் திருவுளம்(மத் 18:14) என்கிறார்.
என்ன சம்பளம்?
எசாயா இறைவாக்கினர் இவ்வாறு சொல்கிறார், “என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது”(எசா 49:4). சம்பளம் கடவுள் தருவார். ஆசீர்வாத மழையில் நனைப்பார். அவர் தம் பணியை செய்யும் அனைவரும் நீரோடையோரம் நடப்பட்ட பசுமையான மரம் போல செழித்தோங்குவர்.
மனதில் கேட்க…
1. எனக்கு வேலைக்கு செல்ல ஆசை இருக்கிறதா?
2. நெறிதவறிப் போனவர்களை நெறிப்படுத்தும் நெறியாளர் பணியை செய்யலாமே?
மனதில் பதிக்க…
“ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள், இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்” (கலாத்தியர் 6:2)
~அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா