வேறெந்த இனத்திற்கும் அவர் இப்படிச் செய்யவில்லை
திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20
கடவுள் இஸ்ரயேல் மக்களை எந்த அளவிற்கு அன்பு செய்து வந்திருக்கிறார் என்பதை, அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். மற்ற நாட்டினர் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து பொறாமை கொள்ளக்கூடிய அளவிற்கு அவர்கள் இறைவனால் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். கடவுள் தன்னுடைய நீதிநெறிகளையும், நியமங்களையும் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். வேறெவர்க்கும் இந்த நியமங்கள் தெரியாது. ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் அதனைக் கடைப்பிடித்து கருத்தாய் கடவுள் முன்னிலையில் வாழ்ந்திருப்பார்கள். அவ்வளவுக்கு கடவுளின் நியமங்கள் நேர்மையானவை என்பது திருப்பாடல் ஆசிரியருடைய கருத்து.
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பை வெகு எளிதானதாக எடுத்துக்கொண்டார்கள். அந்த அன்பின் ஆழத்தை அவர்களால் உணர முடியவில்லை. அவர்களால் உணரமுடியவில்லை என்பதை விட, உணரவில்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் திருப்பாடல் ஆசிரியர் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து இந்த அறைகூவலை விடுக்கிறார். “எருசலேமே, ஆண்டவரைப் போற்றுவாயாக”. கடவுள் அவர்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா நன்மைகளையும் நினைத்துப்பார்த்து, அவருடைய திருப்பெயரைப் போற்ற வேண்டும். அவருக்கு செவிமடுக்க வேண்டும். அவரைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
இறைவன் விடுக்கின்ற இந்த அழைப்பை ஏற்று, நாம் இறைவன் நமக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நன்றியுணர்வோடு எண்ணிப்பார்ப்போம். இறைவனுடைய அன்பையும், அருளையும் நாம் நிறைவாகப் பெற்று எப்போதும் மகிழ்வோடு வாழ வேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்த திருப்பாடலை தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்