வேட்கைத் தணிய…
மத் 20 : 17-28;
‘பதவி மோகம்’ என்பது அரசியலில் மட்டுமல்ல, திரு அவையிலும், பங்குப் பேரவையிலும், ஏன்? நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகிறது. நாம் இதனை நினைத்து தலைகுனிய வேண்டியதாக மாறியுள்ளது. பற்றறியாத இயேசுவது இறையாட்சியின் அடிக்கல்லினைக் கூட அறியாத பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தினால் இங்கே இன்றைய நற்செய்தியில் பேரம் பேசுகிறாள். ஆனால் இயேசுவின் படிப்பினைகளையும் அவரது இறையாட்சியின் திட்டத்தினையும், அவரது வாழ்வினையும் கற்றறிந்த நாம், அப்பெண்ணைவிட ஒரு படி கீழே சென்று பதவிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் தாறுமாறான இழிவான செயல்களை நமது கையில் எடுக்கத் தயங்குவதில்லை. என்னே ஓர் அவமானம்? ஏன் இந்த 2000 ஆண்டுகளில் இந்த விடயத்தில் மட்டும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றோம்?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒருவிதமான வெறுமை உண்டு என்பர் சில உளவியலாளர்களும் மெய்யியலாளர்களும். ஆனால் அதனை வெறுமை என்று சொல்வதைக் காட்டிலும் ஒருவிதமான வேட்கை என்று சொல்வதே சாலச் சிறந்தது. இந்த வேட்கையை தணிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அலைகின்றோம். இந்த வேட்கையை இறைவனைக் கொண்டு தணிக்கும் போதே நாம் முக்தி (இந்து) பெறுகிறோம். புனித நிலையை அடைகிறோம் அல்லது நிர்வாண (புத்தம்) நிலையை அடைகிறோம். இதற்கு மிகவும் உதவியாக இருப்பது பிறரன்பே. இதற்காக கொடுக்கப்படுவதே அதிகாரமும், பதவியும். பிறரைத் தன் பதவியின் மூலமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் ஒடுக்குவது நல்லதல்ல. மேலும் நம்மில் பலரும் தாங்கள் வகிக்கும் பதவியைப் பொறுத்தே தனது மதிப்பும் மகிழ்ச்சியும் கூடும் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் இந்த அறியாமை என்ற இருளினை நீக்கியவர்களோ தான் வகிக்கின்ற பதவியும் இடமும் மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை.
மாறாகத் தான் எந்தப் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பட்டத்தைப் பெற்றாலும் பெறாவிட்டாலும், பிறரை அன்பு செய்வேன், பிறரன்புப் பணியில் ஈடுபடுவேன் என்ற உண்மையை அறிந்திருக்கிறார்கள். இம்மாபெரும் உண்மையை இத்தவக்காலத்தில் வாழ்வாக்குவோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு