”வெளிவேடக்காரரே,… இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?” (லூக்கா 12:56)
இயேசு இறையாட்சி பற்றிப் போதித்த வேளையில் அவர் வழியாகக் கடவுள் பேசுகின்றார் என்ற உண்மையைச் சிலர் ஏற்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை. இயற்கையில் தோன்றுகின்ற அடையாளங்கள் வழியாகப் பல உண்மைகளை அறியக் கற்றுக்கொண்ட மனிதர் கடவுளிடமிருந்து வருகின்ற அடையாளங்களை ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று இயேசு கேட்டார். வானம் சிவந்தால் கால நிலை நன்றாக உள்ளது எனவும், காற்று மந்தாரமாக இருந்தால் இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும் எனவும் (காண்க: மத்தேயு 16:2-3) அறிந்துகொள்ள மனிதருக்கு இயலும் என்றால் கடவுளாட்சி பற்றிய அடையாளங்களின் பொருளை அவர்கள் அறியத் தவறியது ஏன்? தம்மை மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள் பல அடையாளங்கள் வழியாகத் தம் உடனிருப்பையும் வல்லமையையும் நமக்கு அறிவிக்கின்றார். கடவுளின் வெளிப்பாடு இன்றைய உலகிலும் தொடர்கிறது. இந்த உண்மையை 2ஆம் வத்திக்கான் சங்கம் எடுத்துரைக்கிறது. இயேசுவின் நற்செய்தியை ஒவ்வொரு தலைமுறையினரும் நன்முறையில் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் ”காலத்தின் குறிகளை” நாம் கண்டுகொண்டு அவற்றின் வழியாக நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். ”காலத்தின் குறிகளைத் துளாவி அறிந்து, நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக் கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருச்சபையின் கடமையாகும்” (2ஆம் வத்திக்கான் சங்கம், ”இன்றைய உலகில் திருச்சபை”, எண் 4).
நாம் வாழ்கின்ற காலத்தின் அறிகுறிகள் பல உள்ளன: விரைவாக நிகழ்கின்ற மாற்றங்கள், மனிதர் அனைவரும் சமமே என்னும் உண்மையை ஏற்றாலும் இன்றைய உலகில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள், அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அறநெறியில் மனிதர் பின்தங்கியிருத்தல் போன்றவற்றை நாம் இன்று காண்கின்றோம். இந்த அறிகுறிகள் நமக்கு உணர்த்துவது என்ன? கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வரவேண்டும் என்றால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும்; அறிவில் வளர்கின்ற மனித குலம் அறநெறி உணர்வோடு செயல்பட வேண்டும். இயேசு நம்மிடம் கேட்கின்ற கேள்வி இது: ”இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?”
மன்றாட்டு
இறைவா, எங்களோடு தொடர்ந்து உறவாடுகின்ற உம்மை எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கண்டுகொள்ள அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்