வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் !
இன்றைய நற்செய்தி வாசகம் ஒரு வித்தியாசமான காட்சியையும், செய்தியையும் நமக்குத் தருகின்றது. இயேசுவின தாயும், சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால், மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. எனவே, உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் என்று இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டது என்று வாசிக்கிறோம்.
இந்தக் காட்சியை இரண்டு கோணங்களில் அணுகலாம். இயேசுவின் கோணம் மற்றும் அன்னை மரியா மற்றும் சகோதரர்களின் கோணம். இயேசுவின் கோணத்திலிருந்து பார்த்தால், சொந்தத் தாயும், உறவினர்களும் வந்திருந்தும்கூட அவர்களைக் காண இயலாதபடி பெருந்திரளான மக்களுக்கு அவர் போதித்துக்கொண்டிருந்தார். தன் சொந்த குடும்பத்தினரைவிட தந்தை இறைவன் தந்த பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அறியலாம்.
அன்னை மரியாவின் கோணத்திலிருந்து பார்த்தால், பரபரப்பான இறைப் பணியில் ஈடுபட்டிருந்த தம் மகனைப் பற்றி அந்தத் தாய் பெருமிதம் அடைந்திருப்பார். அத்தோடு, அவரது பணிக்கு இடையூறு செய்யாமல், ஆவலுடன் வெளியே காத்துக்கொண்டிருக்கவும் முன் வந்தார். இது அன்னையின் எளிமையையும், இறைத் தந்தைக்கு அவர் காட்டிய பணிவையும், தமது மகனின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள்மீது அவர் கொண்ட பரிவையும் ஒருசேரக் காட்டுகிறது. என்னே அன்னையின் பெருந்தன்மை! என்னே அன்னையின் எளிமை! உரிமை கொண்டாடாமல், ஒதுங்கி நின்றுகொண்டிருக்கும் இந்தக் காட்சி நமக்கும் தாழ்ச்சியையும், பற்றிக்கொள்ளா தன்மையையும், நிறை அன்பையும் கற்றுத் தரட்டும்.
மன்றாடுவோம்: இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிற அனைவரையும் உம் தாயாக, சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது தாய் உம்மைக் காண விரும்பி வெளியே பொறுமையுடன் நின்றுகொண்டிருந்த பெருந்தன்மைக்காக உம்மைப் போற்றுகிறோம். அந்த அன்னையிடம் விளங்கிய தாழ்ச்சி, எளிமை, பெருந்தன்மை, பற்றிக்கொள்ளாப் பாசம் போன்ற அனைத்து நற்பண்புகளையும் எங்களுக்கும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருள்தந்தை குமார்ராஜா